திருப்பூர், மார்ச் 18 –
பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் உண்மையும், நேர்மையும் இல்லாத இயக்கம், அதே சமயம் தியாகி பன்னீர்செல்வம் போன்ற எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தால் வளர்ந்து வருவது கம்யூனிஸ்ட் இயக்கம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் கூறினார்.

திருப்பூர் கேத்தம்பாளையம் பகுதியில் பனியன் தொழிலாளர்களை சங்கமாக அணிதிரட்டியதால் சிஐடியுவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கடந்த 1998 ஆம் ஆண்டு தனியார் பனியன் கம்பெனி உரிமையாளரால் கூலிப்படையை ஏவி படுகொலை செய்யப்பட்டார். அவரது 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சனியன்று கேத்தம்பாளையம் பகுதியில் அவரது நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பூரில் இன்று (சனிக்கிழமை) பிஎம்எஸ் என்ற பாஜக சார்பு தொழிற்சங்கம் சார்பில் மாநாடு நடத்துவதாக நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இந்த சுவரொட்டிகளில் “திறன்மிகு தொழிலாளர், வலிமையான பாரதம்” என்ற வாசகங்கள் அச்சிட்டிருப்பதை பார்க்கலாம். தொழிலாளர்களின் நலனுக்காக நடத்தக்கூடிய தொழிற்சங்கத்தில் கூட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சனைகளைப் பற்றியோ, ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்பதைப் பற்றியோ குறிப்பிடவில்லை. இதுதான் அவர்களது அடிப்படை குணம். ஆனால் தொழிலாளர்களின் நலனைக் காப்பதற்காக உயிரைப் பறிகொடுத்தவர் தியாகி பன்னீர்செல்வம்.சமீபத்தில் திருப்பூருக்கு வருகைதந்த பாஜகவின் எச்.ராஜா தரக்குறைவாக கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். அவருக்கோ, அவர் சார்ந்தஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதாவுக்கோ இந்த இயக்கத்தைப் பற்றி எதுவும் தெரியாது. “செக்கும் தெரியாது, சிவலிங்கமும் தெரியாது” என்று தமிழகத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதுபோல அவர்களுக்கு உண்மையான நேர்மை, எளிமை, தியாகம் செய்யும் இயக்கத்தின் மதிப்பு பற்றி தெரியாது.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்ப்பதற்காக கேரளாவில் இருந்து வந்தவர் வி.பி.சிந்தன். அவரது பேச்சுத்திறனைக் கேட்டு காவடிச் சிந்து போல் உள்ளது என்று சொல்லி அவருக்கு சிந்தன் எனப் பெயர் வைத்தவர் கவிஞர் பாரதிதாசன். அவர் தொழிலாளர்களைத் திரட்டி வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தியதற்காக சென்னையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அவரது உடலில் ஏராளமான இடங்களில் கத்தியால் குத்தினர். அவர் இறந்துவிட்டார் என முடிவு செய்து விட்டுச் சென்றனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் மீண்டு வந்து தொழிலாளர்களிடம் பேசும்போது, ஏராளமான ரத்தம் சிந்தப்பட்டுவிட்டது, எஞ்சிய ரத்தமும் தொழிலாளர்களின் நலனுக்காகத்தான்! என்று கூறியவர் வி.பி.சிந்தன்.அஸ்ஸாமில் தனிநாடு கேட்டு பயங்கரவாதிகள் போராடியபோது, தேசப் பிரிவினைக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இளம் மாணவர் தலைவர் நிரஞ்சன் தாலுக்தார். இந்தியாவின் 26 மாநிலங்களை பிரிக்க விடமாட்டோம் என போராடியவரை கொலை மிரட்டல் விடுத்தபயங்கரவாதிகள் அவரை 26துண்டுகளாக வெட்டிக் கொன்றனர். அவரது இறுதிநிகழ்ச்சியில் பேசிய அவர் தந்தை, என்னையும் 26 துண்டுகளாக வெட்டிக் கொன்றாலும் இந்த நாட்டை பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார். இதுதான் இந்த இயக்கத்தின் மகத்துவம்.

அதுபோல் மதுரையில் தியாகிலீலாவதி, நாமக்கல் பள்ளிபாளையத்தில் வேலுச்சாமி என எத்தனையோ தியாகிகளால் ரத்தம் சிந்தி மக்கள் நலன் காக்க வளர்க்கப்பட்டு வருவதுதான் கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் பாஜக நேர்மையும், உண்மையும் இல்லாத இயக்கம். இதே திருப்பூரில் பாஜகவை சேர்ந்த முத்து என்பவர் தற்கொலை செய்து கொண்டபோது, அவரது வீட்டுக்கு முன்பாக இந்து முன்னணி கொடி, தேசியக் கொடி,மோடி படம் ஆகியவற்றை வைத்துசெருப்பு மாலை போட்டு முத்துவை அரசியல்ரீதியாகவோ, மதரீதியாகவோ கொலை செய்துவிட்டனர் என்று தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றால் அவரை காப்பாற்ற முயல்வோம். ஆனால் அவரது சடலம் தொங்கும் நிலையில், தங்கள் சொந்த கட்சி தலைவர் படம் உள்பட கொடி, தேசிய கொடிக்கு செருப்பு மாலை போட்டவர்களின் நோக்கம் என்ன? கலவரம் செய்ய வேண்டும் என்பதுதான். கலவரம் செய்யாமல் பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. மண்டைக்காடு கலவரம் நடந்தபிறகுதான் அங்கு அவர்கள் வேரூன்றினர். இது போல் நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்தி ஆதாயம் தேடப் பார்க்கக்கூடியவர்கள்தான் பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர். ஆனால் மக்களைப் பாதுகாக்க, நாட்டைப் பாதுகாக்க தியாகம் செய்து அர்ப்பணிப்போடு பாடுபடும் இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். தியாகம் செய்வோம், முன்னேறுவோம். இவ்வாறு கே.கனகராஜ் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆ.சிகாமணி, எம்.என்.நடராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். கிளைச் செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் தியாகி பன்னீர்செல்வத்தின் இரு புதல்வர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆடைகளை மாநிலசெயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் வழங்கினார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர், தொழிலாளர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.