கோவை, மார்ச் 18-
ஆணாதிக்க சமூகத்தில் உழன்று தவிக்கும் பெண்களின் உணர்வுகளை உள்வாங்கி பெண்  விடுதலைக்காக உழைத்திட்ட பெரியார் பெண் சமூகத்தின் அம்மாவாகவே திகழ்கிறார் என பாலபாரதி நெகிழ்ச்சியுரையாற்றினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக மகளிரணி சார்பில் உலக மகளிர் நாள்விழா கோவையில் சனியன்று நடைபெற்றது. வடகோவை குஜராத்தி சமாஜத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆனைமலை ருக்குமணி தலைமை தாங்கினார். ர.கல்பனா வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பாலபாரதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணை செயலாளர் முனைவர் சுந்தரவள்ளி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக, பாலபாரதி பேசுகையில், ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகளில் ஆண் சாதிப்பவராகவும், பெண் திறமையற்றவராகவும் எப்படி இருக்க முடியும் என்பதை அன்றே சாடியவர் தந்தை பெரியார். பல நாடுகளில் குடும்ப அமைப்பு, பெண்களின் நிலை குறித்து விஞ்ஞான பூர்வமான ஆய்வை மேற்கொண்டவர் பெரியார். அதன் அடிப்படையிலேயே இந்தியாவில், தமிழகத்தில் பெண்களின் நிலை குறித்து பேசினார். தன்னுடைய கட்டுரைகளில், இயக்க செயல்பாடுகளில் பெண் விடுதலைக்கான முக்கியத்துவத்தை அளித்து போராட்ட களம் கண்டார்.மேலும், கருப்பு சட்டை அணிந்த உங்களுக்கு அவர் தந்தை பெரியார், சிவப்பு சட்டை அணிந்த எங்களுக்கு தோழர் பெரியாராக தெரிகிறார். சட்டமன்ற, நாடாளுமன்ற உள்ளாட்சிகளில் பதவிக்கு பெண்கள் வருகிறார்கள். ஆனால் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பல்வேறு திறமைகளுடைய பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த அனுமதிப்பதில்லை. அரசு நிர்வாகமே பெண் பிரதிநிதிகளிடம் இந்த பாரபட்சத்தை கடைபிடிக்கிறது. பெண்களின் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் பெண்களை அவமானப்படுத்தும் வன்முறைதான் மிகக்கொடுமையானது. இத்தகைய வன்முறைகளை தினம் தினம் வீடுகளில், அலுவலகங்களில் பெண்கள் அனுபவித்து வருகின்றனர். முற்போக்காளர்கள் தங்களின் வீடுகளில் உள்ள பெண்களுக்கு அந்த சுதந்திரத்தை வழங்குங்கள். பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்க, ஒருங்கினைப்பது போன்ற வாய்ப்பை அவர்களுக்கு வழங்குங்கள். 33 சதவித பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 ஆண்டுகள் ஆனாலும் தரமாட்டோம் என்பதே ஆட்சியாளர்களின் மனநிலையாக உள்ளது. இப்படியான சமூகத்தில்தான் பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்கிற உணர்வோடு களப்பணியாற்றினார் பெரியார் பெண் சமூகத்திற்கு அம்மாவாகவே திகழ்கிறார் என்று நிறைவு செய்தார்.

முன்னதாக, மகளிர் தின விழாவில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், தலைவர் வெ.ஆறுச்சாமி, இரா.அமுதினி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி செயலாளர் நிலாமணிமாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் துவக்கமாக நிமிர்வு கலைக்குழுவின் தப்பாட்ட நிகழ்ச்சி எழுச்சியோடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.