சேலம், மார்ச் 18-
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு 1499 ரூபாய் கட்டணத்தில் 50 நிமிடத்தில் சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை மார்ச் 25 ம் தேதி துவக்கம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமான சேவையை துவக்கி வைக்க உள்ளநிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மாவட்ட ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரத்தில் கடந்த 1993-ம் ஆண்டு சுமார் 163 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. தொழில் நகரமான சேலத்தில் இருந்து வெளியூர், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள், வியாபாரிகளின் வசதிக்காக பெரும் போராட்டத்துக்கு இடையே அப்போது இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது. என்.இ.பி.சி. என்ற தனியார் நிறுவனம் விமான சேவையைத் தொடங்கிய சில மாதங்களிலேயே பயணிகளிடையே போதுமான வரவேற்பு இல்லாததாலும்,சேலத்தில் இருந்து கோவை சென்று அங்கிருந்து சென்னை செல்லும்படியாக பயணத்திட்டம் இருந்ததாலும் அப்போது விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு தரப்பினரின் சீரிய முயற்சியால் 2010 ம் ஆண்டு மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. அப்போது கிங்பிஷர் நிறுவனம் சேலம் – சென்னை விமான சேவையை மாலை நேரத்தில் தொடங்கியது. இதனால் போதிய வரவேற்பு இல்லாததால் அதுவும் நிறுத்தப்பட்டது. சேலம் ஸ்மார்ட் சிட்டியாக வளர்ந்து விட்ட நிலையில் தொழில் துறை வளச்சிக்கும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு விமான தேவை என்ற கோரிக்கை வலுவாக வந்த நிலையில் சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் வகையில் உதான் திட்டம் மூலம் நகரங்களை இணைக்கும் வகையில் ஹைதராபாத், சென்னை, சேலத்திற்கு மார்ச் 25ம் தேதி துவங்க உள்ளது. இந்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சேலம் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ட்ருஜேட் நிறுவன அதிகாரிகள் விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

விமான தரை இறங்கும் இடம், விமானம் புறப்படும் இடம், விமான கட்டுப்பாட்டு அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு தயார் நிலை குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டு அறிந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.