சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நாமக்கல் கவிஞர் பெயரில் உள்ள பத்துமாடி கட்டிடத்தில் அனைத்து துறைகளின் அலுவலகங்கள் உள்ளன. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திப்பதற்காக, மாநிலம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

மலிவு விலை!
தலைமைச் செயலக வளாகத்தில் கூட்டுறவு பணியாளர் அருந்தகம் உட்பட எட்டு உணவகங்கள் உள்ளன. கூட்டுறவு அருந்தகத்தில் மதிய உணவு 40 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மற்ற கடைகளில் 50 முதல் 60 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் போன்றவை கூட்டுறவு உணவகத்தில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். தனியார் கடைகளில் ரூ. 30-க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், 2 இட்லி ரூ.12, மெதுவடை ரூ. 7, ஸ்பெஷல் வடை ரூ. 8, பொங்கல் ரூ.17, தோசை ரூ.25 என கூட்டுறவு உணவகத்தில் மலிவு விலைக்கு சுவையுடன் வழங்கப்படு கிறது. தனியார் கடைகளில் விலை கூடுதலாக விற்பதால் தலைமைச் செயலகம் வருவோர் கூட்டுறவு உணவகத்தையே பெரும்பாலும் விரும்புகின்றனர். அதேபோல், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும் பகுதியினர் இந்த உணவகத்தையே நம்பி வருகின்றனர்.

கூட்டுறவை விழுங்கிய கூட்டு!
சட்டப்பேரவையின் ஒவ்வொரு கூட்டத்தொடரின்போதும் தினமும் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பத்திரிகையாளர்கள் பசியாறுவதற்காக, சட்டசபை கூட்ட அரங்கு அருகில், தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர் கூட்டுறவு அருந்தகம் சார்பில் கேண்டீன் அமைக்கப்படுகிறது. அதில் காலை உணவாக இட்லி, பொங்கல், வடை, பூரி, டீ, காபியும் மதிய நேரத்தில், சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், கீரை சாதம் போன்றவை குறைந்த விலையில் வழங்கப்படும். அதேபோல், தனியார் உணவகங்களும் மதியம் அனுமதிக்கப்படுவது உண்டு. இப்படி அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றுள்ள தலைமைச் செயலக கூட்டுறவு அருந்தகம் இன்றைக்கு சுமார் 60 லட்சம் ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது.

‘குரங்கு கையில்’….
தலைமைச் செயலக கூட்டுறவு பணியாளர் அருந்தகத்திற்கு 11 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 3 பேர் பெண்கள். மூன்று இடம் தாழ்த்தப்பட்டோர். இவர்களில் சாய்நாத்தை தலைவராகவும் ராஜாவை துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். இவர்களிடம் நிர்வாக பொறுப்பு வந்தபிறகு, “குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக” மாறிவிட்டது இவ்உணவகம். இந்த உணவகத்தில் ஊழியர் பற்றாக்குறை இருந்தாலும் அர்ப்பணிப்புடன் பல்லாண்டு காலமாக முகம் சுளிக்காமல் பணியாற்றி வரும் ஊழியர்களின் சேவையை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. தற்போது 25 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இதில் 7 பேர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள்.

மற்றவர்கள் தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் குறைந்தது பத்து பதினைந்து ஆண்டு காலமாக குறைந்த ஊதியத்தில் (நாள் ஒன்றுக்கு ரூ. 250) பணியாற்றி வருகிறார்கள். நிரந்தர ஊழியருக்கு அதிகபட்ச சம்பளம் மாதம் ரூ பத்தாயிரம்தான் வழங்கப்படுகிறது. ஊதியத்தை 20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டும் இதுவரைக்கும் அமலாக்கப்படவில்லை. மாத மாதம் 5 ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டு வந்த சம்பளம் “கழுதை தேய்ந்து கட்டெறும்பான” கதையாக கடந்த இரண்டு மாதமாக 15 தேதி கடந்துவிடுகிறது. அடுத்த மாதம் எப்போது கிடைக்கும் என்பதும் கேள்விக்குறிதான்?

சாப்பிட்டது போனசையும்தான்!
ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூசைக்கு முன்பு கருணை அடிப்படையில் 4 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கி வந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதுவும் ‘கானல்’ நீரானது. முறையாக வழங்கப்பட்டு வந்த சீருடையும் சோப்பும் கிடைப்பதில்லை. பணியாளர்களிடம் பிடித்தம் செய்யும் பணத்தை முறையாக பி.எப் அலுவலகத்தில் செலுத்துவதும் இல்லை. காலை, மாலை நேரங்களில் விற்பனை செய்து வந்த தோசை, இனிப்பு வகைகளையும் நிறுத்தி விட்டனர். இந்த உணவகத்தில் பல வருடமாக சமையலராக பணியாற்றி வந்தரங்கநாதன் என்பவர் சமீபத்தில் காலமானார். அந்த குடும்ப த்திற்கு இதுவரைக்கும் பணப் பயன்கள் கிடைக்கவில்லை. முனுசாமியின் வாரிசுக்கு வேலையும் வழங்கவில்லை.

‘அங்குசம் வாங்க காசு இல்ல’…
மிக பழமையான கட்டிடமான நாமக்கல் கவிஞர் மாளிகை 28 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் அதன் அருகில் ஒதுக்குப்புறத்தில் சிமெண்ட் ஓடுகள் வேயப்பட்ட அறையில் தலைமைச் செயலக வளாகத்தில் செயல்பட்டுவரும் கூட்டுறவு பணியாளர் அருந்தகத்தின் மேற்கூரைகள் பிய்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஓட்டை உடைசல்களுமாக இருப்பதை பார்த்தபோது “யானையை வாங்கியாயிற்று.. அங்குசம் வாங்ககாசில்லை” என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

வெங்காயமணம்…!
உணவகத்திற்கு தேவைப்படும் காய்,கனி, அரிசி, பருப்பு, ஆயில் என அனைத்திலும் 20 முதல் 25 சதவீதம் கமிஷன் என்பது இங்கு எழுதப்படாத விதியாக உள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள், துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் என ஒட்டுமொத்த நிர்வாகமும் அருகில் இருந்தும் தலைமைச் செயலக வளாகத்தில் கூட்டுறவு பணியாளர் அருந்தகத்தின் வளர்ச்சி, பணியாளர்களின் நலன்களில் சிறிதும் கவலை கொள்ளாமல் பணத்தை சுருட்டுவதில் குறியாகச் செயல்பட்டதால் சுமார் 60 லட்சம் ரூபாய் வரைக்கும் கடனில் தத்தளிக்கிறது. இதற்கெல்லாம் காரணம், தற்போதைய நிர்வாகக்குழுவின் முறைகேடுகளாகும். “வெந்தால் தெரியும் வெங்காய மணம்” என்பதுபோல நிர்வாகக்குழுவின் செயல்பாடு அம்பலமாகியுள்ளது.

சிறிய பானை…
எந்த நோக்கத்திற்காக கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை சீரழிக்கும் வகையில் நிர்வாகக் குழுவின் செயல்பாடு உள்ளது. கோட்டைக்குள் வீழ்ந்திருக்கும் இந்த ஓட்டையை சரி செய்ய வேண்டும். அதற்கு சிறியபானை சீக்கிரம் கொதிக்கும்” என்பதைப்போல 60 லட்ச ரூபாய் நஷ்டத்தில் இருக்கும்போதே இச் சீர்கேடுகளிலிருந்து தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு பணியாளர் அருந்தகத்தினை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரது கோரிக்கையாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.