உலகில் ஒருவரைப்போன்றே 7 பேர் இருப்பதாக கூறப்படுவதுண்டு. விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்திலோ வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான பயணச்சீட்டு கட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத் திட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 14ஆந் தேதி புதனன்று விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட செஞ்சி பணிமனையிலிருந்து தடம் எண் 122 ஜி பேருந்து தடத்தில் இயக்கப்படுகிறது. இப்பேருந்து செஞ்சியிலிருந்து புறப்பட்டு கண்டாச்சிபுரம் வழியாக விழுப்புரம் வந்து பின் இதே தடத்தில் செஞ்சி சென்று அங்கிருந்து சென்னை சென்று திரும்ப செஞ்சி வந்து பணிமனைக்குச் செல்ல வேண்டும். செஞ்சியிலிருந்து விழுப்புரம் வரும்போது வழியில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் பேருந்தில் ஏறி பரிசோதித்துள்ளனர்.

ஒரே எண்…

அப்போது பேருந்தில் பணியிலிருந்த நடத்துனரிடம் இருந்த 2 ரூபாய் பயணச்சீட்டு கட்டுகளில் இரண்டு கட்டுகளில் ஒரே சீரியல் வரிசையும், ஒரே எண்ணில் தொடங்கி ஒரே எண்ணில் முடியும் வகையிலும் மாற்றமில்லாமல் இருந்துள்ளது. மேலும் பரிசோதித்த போது மேலும் 3 கட்டுகளிலும் இதேபோல் இருந்துள்ளது. (ஏ.பி 21மூ45901 முதல் 950 வரை 2 கட்டும், ஏ.பி 21மூ45951 முதல் 46000 வரை 3 கட்டும்). ஒரு கட்டில் தலா 50 பயணச்சீட்டுகள் இருக்கும்.

மிளகாய் அரைக்க…

இதனால் அதிர்ச்சியடைந்த பயணச்சீட்டு பரிசோதகர்கள் பேருந்து விழுப்புரம் வந்தவுடன் மீண்டும் செஞ்சிக்கு இயக்காமல் விழுப்புரம் தலைமையகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.  பின் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்கள் செஞ்சி பணிமனை கிளைமேலாளர் மற்றும் பயணச்சீட்டுகளை தடங்களுக்கு பிரித்து வைக்கும் அலுவலக ஊழியர், தலைமையகத்தில் இதற்கு பொறுப்பான அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் அடுத்தநாள் வியாழனன்று தலைமையகத்திலிருந்து அதிகாரிகளின் குழு செஞ்சிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். என்ன ஆய்வு என்று நினைக்கிறீர்கள்?  இப்பிரச்சனை பெரிதானால் யார் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்றுதான். இதில் “தமிழக அரசு மிகுந்த வேதனையோடு(!) தவிர்க்க இயலாமல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியபோது அவசர அவசரமாக புறநகரப் பயணச்சீட்டுகள் அச்சடித்ததில் நடைபெற்ற அச்சுப்பிழையால் இப்படி நடைபெற்றுள்ளது” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.

அழியும் கழகம்!

பயணச்சீட்டு அச்சிடும் பணி தனியார் அச்சகத்தில்தான் நடைபெறுவதாகவும் இதுவும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் சிறந்த மேற்பார்வையின்(!) கீழ் நடைபெறுவதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். பயணச்சீட்டுக்களை இயந்திரம் மூலம் வழங்கியதை மாற்றி ஒரு பயணிக்கு பல பயணச்சீட்டுகள் தருவது பல பிரச்சனைகளை உருவாக்குவதோடு முறைகேடுகளுக்கும் வழி வகுக்கும் என கடந்த பிப் 12 தேதியிட்ட தீக்கதிர் நாளிதழில் “டப்பா பஸ், டபரா பஸ்”என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்திக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டேஷனரி செலவுகள் என்ற வகையில் பல்வேறு வகைகளில் முறைகேடு நடைபெறுவதாகவும் பலர் குற்றம் சுமத்துகின்றனர். ‘ ஏற்கனவே பணி நியமனம் முறைகேடாக நடைபெற்றதுபோல விழுப்புரம் கழகத்தில் பல வகைகளில் முறைகேடு நடைபெறுவதாக கூறப்படுவது தொடர்பாக உரிய அமைப்பின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ எனக் கூறுகிறார் போக்குவரத்து சிஐடியு தலைவர் டி.இராமதாஸ்.

தொழுவம் புகுந்த ஆடு…

ஏற்கனவே இதே கழகத்தில் இதுபோன்றே பயணச்சீட்டு அச்சிடுவதில் முறைகேடு நடைபெற்று சம்மந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால் இம்முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்பட்ட கருணையான அதிகாரி இதே கழகத்தில் உயர்பதவிக்கு வந்து ஓய்வுபெற்ற சம்பவமும் நடைபெற்றது.

அதைப் போலவே இந்த அச்சுப்பிழையும் திருத்தப்படலாம். ஆனால் பாதுகாக்க வேண்டிய பொதுத் துறை போக்குவரத்தை சில சுயநல கும்பல்கள் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு சுரண்டுவது நீண்டகாலம் நடக்காது. ஏனென்றால் “தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமல் போகுமா” என்ன…

  • வி. சாமிநாதன்

Leave a Reply

You must be logged in to post a comment.