மும்பை,
மகாராஷ்டிரா மாநிலத்தில் நச்சு பொருள் கலந்த நீரை பருகிய 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக ஆளும் மகாராஷ்டிர மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் குடிநீர் சேகரிக்க கடும் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் அசோலா மாவட்டத்தில் உள்ள யாவத்மால் கிராமத்தின் ஒரே குடிநீர் ஆதாரமான 250 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் வழியாக மக்கள் குடிநீர் சேகரித்து வருகின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் குடிநீரில் கலந்துள்ள நச்சுப்பொருளால் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 38 பேர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 110க்கும் மேற்பட்டோர் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அசோலா மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் மாநிலம் முழுவதும் இதே சூழல் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்படும் குடிநீரில் நைட்ரேட் என்ற நச்சுப்பொருள் கலந்துள்ளது. தொடர்ந்து நச்சுப்பொருள் கலந்த குடிநீரை பருகுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாங்கள் குடிநீரில் கலந்துள்ள நச்சு பொருளால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பிரச்சனை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். எங்களுக்கு உரிய மருத்துவ வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தோம் ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஆச்சார்யா வினோபாவே மருத்துவமனை மருத்துவர் அபியூடி மெகே கூறுகையில் யவத்மால் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் 38 பேர் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு காரணம் அவர்கள் பருகும் குடிநீரில் உள்ள நைட்ரேட் என்று அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: