திருப்பூர்:
இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரம் என புகழப்படும் திருப்பூரில் மத்திய மோடி அரசின் தவறான கொள்கை நடைமுறை காரணமாக, ஒரே ஆண்டில் ஏற்றுமதி மதிப்பு ரூ.2
ஆயிரத்து 500 கோடி வீழ்ச்சி அடைந்து விட்டது.

இந்திய அளவில் மொத்த ஆயத்தஆடை ஏற்றுமதி இந்த நிதியாண்டில், பிப்ரவரியுடன் முடிவடைந்த 11 மாத காலத்தில் 97 ஆயிரத்து 984 கோடி. மொத்த ஆயத்தஆடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு 22 சதவிகிதம். இதன்படி 11 மாத காலத்தில் திருப்பூரின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரத்து 550 கோடி.மார்ச் ஒரு மாதத்தில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி ஏற்றுமதியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே இந்தாண்டு திருப்பூரின் மொத்த ஏற்றுமதி அதிகபட்சம் ரூ.23 ஆயிரத்து 500 கோடியாக இருக்கும்.கடந்த 2016 – 17ஆம் நிதியாண்டில் திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான பின்னலாடைகளின் மதிப்பு ரூ.26 ஆயிரம் கோடி. இப்போது ஏற்றுமதி ரூ.23 ஆயிரத்து 500 கோடி எனும்போது, முந்தைய ஆண்டைவிட ஏறத்தாழ 10 சதவிகிதம் இந்த ஆண்டு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு கொண்டு வந்த ஜிஎஸ்டி
திணிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு வழங்கிவந்த 7.5 சதவிகித டிராபேக் ஊக்கத்தொகை
யை வெறும் 2 சதவிகிதமாக குறைத்தது ஆகியவற்றால்தான் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதை மாதவாரியான புள்ளி விபரங்கள் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.
இந்திய அளவிலேயே ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்ட கடந்த ஜூலை மாதம் மொத்த ஏற்றுமதி சுமார் 16 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. அதன்பிறகு அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஏற்றுமதிக்கான டிராபேக் ஊக்கத்தொகை வழங்குவது குறைக்கப்பட்டது.

அந்த மாதம் மட்டும் 41 சதவிகிதம் ஏற்றுமதி வீழ்ந்தது. தொடர்ந்து நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 14 சதவிகிதம் அளவுக்கு ஏற்றுமதி
சரிவைச் சந்தித்து வருகிறது.

ஏற்கெனவே கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் ரூ.500, ரூ.1000 செல்லாது என
மோடி அறிவித்ததால் உள்நாட்டு சிறு, குறு பின்னலாடை உற்பத்தித் தொழில்கள் மிகக்கடும் பாதிப்பைச் சந்தித்தன. அப்போது கூட ஏற்றுமதி தொழில் சிறுஅளவுக்கு பாதிக்கப்பட்டாலும் தாக்குப்பிடித்து நின்றது. ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கம் தொடங்கி டிராபேக் குறைப்பு ஆகிய காரணத்தால் இந்த 9 மாத காலத்தில் ஏற்றுமதி தொழில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.2014 தேர்தல் சமயத்தில் திருச்சிக்கு வந்த மோடி, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு தேவையான ஆலோசனைகளை பட்டியலிட்டு தாருங்கள் என தொழில் துறையினரிடம் கேட்டார். அவர்களும் மனமகிழ்ச்சியோடு தங்கள் தேவைகளைப் பட்டியலிட்டுத் தந்து மோடியை புகழ்ந்து தள்ளினர்.

ஆனால் கடந்த 4 ஆண்டு காலத்தில் உள்நாட்டு பனியன் தொழில், ஏற்றுமதி என இரண்டும் அடி மேல் அடி வாங்கி வருகின்றன.விவசாய நெருக்கடியால் விவசாயிகள் தற்கொலை செய்த நிலை போல, இப்போது திருப்பூரில் பின்னலாடை தொழில் துறையைச் சேர்ந்த உரிமையாளர்கள் தற்கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு பின்னலாடை நிறுவன மேலாளர், ஒரு பெண் தொழில் முனைவோர் என இரண்டு பேர் தொழில் நெருக்கடி, கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பலர் நிறுவனங்களை நடத்த முடியாமல் திவாலாகிப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். இங்கு தொழிலாளர் வேலையிழப்பும், வருமான இழப்பும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.