===கே.வரதராசன்====
மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
அவர்கள் திரிபுராவில் தோழர் லெனின் சிலையை உடைத்து கொண்டாடினார்கள், பின் தமிழகத்தில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தினார்கள், உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை நொறுக்கி வீழ்த்தினார்கள் – இப்படியாக அவர்கள் தம் எதிரிகளை வீழ்த்திவிட்டதாக கொக்கரித்தார்கள். சிலைகளாக நின்றாலும், சிம்ம சொப்பனமாய் அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கும் சிந்தனைகளோடு அவர்களால் நேர்மையாக மோத முடியவில்லை, எனவேதான் சிலைகளை உடைத்து திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஊர் ஊராய்ப் பறந்து, கோடிகளில் ஒப்பந்தம் போடுகிறார் திருவாளர் மோடி. சரி நாட்டுக்குத்தான் ஏதோ செய்கிறாரா! என்று பார்த்தால், அப்படியில்லை என்கிறது நான்கு ஆண்டு அனுபவம். கோடீஸ்வரக் கோமான்களை உடன் அழைத்துச் செல்கின்றார். கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் பலவறறையும் ரகசியமாய்க் காக்கிறார். அரசாங்கமே இடைத்தரகராகியிருக்கும் அவல நிலையைக் காண்கிறோம். இதை இடதுசாரிகள்தான் எடுத்துச் சொல்கின்றோம்.
பகட்டுப் பவனிவரும் கோமான்களுக்கு, மாணிக்க எளிமையும், மக்கள் நல சர்க்காரும் கசக்கத்தான் செய்திடும். 25 ஆண்டுகால தொடர் ஆட்சிக்குப் பின், 3 சதவீத ஓட்டு மட்டுமே கைமாற, எல்லா முறைகேடுகளையும் செய்து, அதிகாரத்தை கைப்பற்றியுள்ள பாஜக லெனின் சிலையை குறிவைத்தது. வீடுகளை அடித்து உடைத்து, எளிய தோழர்களின் மீது கொலைவெறித் தாக்குதலை ஏவியது.

அவர்கள் யாரந்த லெனின் என்று கேட்கிறார்கள். இந்தியாவின் பெரும் பிணியாக அமைந்த, நிலவுடைமைச் சாதீயம், முதலாளித்துவச் சுரண்டல் என இரண்டின் விஷக் கூட்டிற்கு அருமருந்தே லெனினும் அவர் சிந்தனைகளும் ஆகும். லெனினியம், எப்போதும் உலகப் பாட்டாளிகளுக்கு ஒளிச் சுடராக, வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. விடுதலையை நேசிப்போர், லெனினை நேசிப்பார்கள். சமத்துவத்தை ஏந்துவோர், அவரின் நல்லுதாரணங்களை பாராட்டுவார்கள்.

தோழர் லெனின், பகத்சிங் உள்ளிட்டு இந்தியப் புரட்சியாளர்கள் பலரின் ஆதர்ச நாயகன். திலகர் முதல் நேரு வரை ஏராளமான தலைவர்களுக்கு உள்ளூக்கம் கொடுத்தவர். மூன்றாம் உலக நாடுகளில் காலனியாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த வரலாற்று நிகழ்வாம் சோவியத் புரட்சியின் பிதாமகன். ஜாராட்சியை வீழ்த்தி, பாட்டாளிகளுக்கான தேசம் படைத்த செம்படையின் தலைவன். லெனின் யார் என்பதைப் புரிந்துகொள்ள, மன்னிப்புக் கடிதங்கள் எழுதியோரால் முடியாது. விடுதலைப் போருக்கு துரோகம் செய்தோரால், காந்திக்கு எதிரான துப்பாக்கியில் ரவை சேர்த்தோரால் நிச்சயம் முடியாது.

மேலும், அவர்கள் ஏன் லெனினை வெறுக்கிறார்கள் என்றால். அவர்கள் ஆண்டைகளைத் துதிக்கிறார்கள். பொதுத்துறைகளையும், பொதுமக்கள் நலன்களையும் அடகுவைத்து, பெரும் பணக்காரர்களுக்கு சொத்து சேர்க்கிறார்கள். பட்ஜெட் விபரங்களை எடுத்துப் பாருங்கள், பெரும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரிச்சலுகை சுமார் 7000 கோடி ரூபாய்கள். வராக்கடன் தள்ளுபடியால் கொடுத்த சலுகை ரூ. 2 லட்சம் கோடி. வரித்தள்ளுபடி, வரி மறத்தலின் பேரால் இன்னும் ஏராளமான சலுகைகளை வாரிக் கொடுக்கின்றனர். பொதுத்துறைகளை விற்று 80000 கோடி ரூபாய்களை பெறப் போகிறோம் என்றும் ‘பெருமை’ கொண்டவர்கள் அவர்கள். கடந்த ஓராண்டை மட்டும் எடுத்துக் கொண்டால், நாட்டின் வளர்ச்சி வீதம், குறைந்துகொண்டு வந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் உருவான சொத்துக்களில் 73 சதவீதம பெரும்பணக்காரர்களை அடைந்திருக்கிறது.

சதுர் வர்ணம் மயா சிருஷ்டி என்று சுரண்டலையும், சமூக ஒடுக்குமுறையையும் ஆண்டவனைக் கொண்டே நியாயப்படுத்தப்படும் மனு நீதி, மக்களை ஒடுக்கி, சாதியாலும், பொருளாதார நிலையிலும் சுரண்டலை தீவிரப்படுத்த உதவுகிறது. அதற்கு எதிராக போர் தொடுத்தவர்களில் மிக முக்கியமானவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும். பெரியாரும், சிங்காரவேலரும், ஜீவானந்தமும் தமிழகத்தில் சுயமரியாதைப் பிரச்சாரத்தையும், பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் ஆழ விதைத்திருக்கிறார்கள். தஞ்சை மண்ணில், சாணிப்பால் சவுக்கடிக்கு எதிராக – தோழர் சீனிவாசராவ் தலைமையில், செங்கொடி இயக்கம் முன்நின்றது.

இந்த மண்ணில் நுழைய வேண்டுமானால், லெனின் சிலையைப் போலவே, பெரியார் சிலையையும் பெயர்த்தெடுக்கவேண்டும் என்ற உணர்வு பாஜகவுக்கு வந்திருப்பது இயல்பே. அந்தத் திமிர்ப்பேச்சுக்கு, தமிழகம் நல்லதொரு வலுவான எதிர்வினையை வழங்கியிருக்கிறது.
” சாதி வகை என்பது பிறவியால் வருவது இல்லை. யாருக்குப் பிறக்கிறதோ அவரது சாதியைச் சொல்லுகிறார்களே ஒழியப் பிறக்கும்போது சாதிமுத்திரையோடு எந்தக் குழந்தையும் பிறப்பது இல்லை. ” என்றார் தந்தை பெரியார், மேலும் “எல்லா மக்களும் படித்துவிட்டால் அவரவர் சாதித் தொழில் செய்ய முற்படுவார்களா? பேனா எடுக்கத்தானே நினைப்பார்கள்? நம் பெண்கள் எல்லாம் பள்ளியிறுதிப் படிப்பு வரை படித்து முடித்துவிடுவார்களேயானால் களை எடுக்கச் செல்வார்களா? படித்துவிட்டால் வயிற்றுக்கொடுமை ஒருபுறம் இருந்தாலும் பட்டினிகிடக்க முற்பட்டாலும் முற்படுவார்களே ஒழிய ஒருபோதும் சாதித்தொழில் செய்ய முன்வரமாட்டான். வெள்ளைச்சட்டை வேலையைத் (White collar job) தான் அனைவரும் நாடுவார்கள்.”

என்றும் கூறினார் பெரியார். இன்று கல்விக்குள்ளேயே சாதியைத் திணிக்க நினைக்கிறார்கள். மத்திய அரசின் பாடத்திட்டமோ, நால்வகை வர்ணங்களைக் குறிப்பிட்டு அதில் எது தாழ்வானது என்று குறிப்பிடுமாறு மாணவர்களைப் பயிற்றுவிக்கிறது. இதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பிறப்பால் தாழ்வு கற்பித்தலை, வலுவாகக் கோலோச்ச முயல்கிறார்கள்.
இன்றும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டால் நாம் அதன் கொடூரத்தை புரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் கண்ட ஒரு தீண்டாமைக் கொடுமை, சாதி வெறி கொண்டவர்கள் வளர்க்கும் ஆண் நாய், தாழ்த்தப்பட்ட மக்கள் தெருவில் வசிக்கும் பெண் நாயோடு கூடலாம். அதே, தாழ்த்தப்பட்டோர் பகுதியில் உள்ள ஆண் நாய், சாதிவெறி கொண்டோர் பகுதியில் வசிக்கும் பெண் நாயோடு கூட முடியாது. அப்படிக் கூடுவதும், நாய் குட்டிகள் போடுவதும் குற்றம் என்ற தீண்டாமை இன்றும் தொடர்கிறது. சாக்கடைத் தண்ணீர் எந்த வழியே செல்ல வேண்டும் என்பதில் தீண்டாமை நிலவுகிறது.

“கடவுள் எங்கும் இருக்கிறார் என்று கூறிவிட்டு, சக மனிதனை விலங்குகளைவிட கேவலமாக நடத்துபவர்கள் இந்துக்கள். எறும்புக்கு சர்க்கரையை இட்டுவிட்டு, மனிதனின் குடிநீர் உரிமையை மறுக்கும் இந்த வேடதாரிகளின் நட்பு உங்களுக்கு வேண்டாம்” என்று கூறினார் அண்ணல் அம்பேத்கர். அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு நேரெதிராக நின்றவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ் கூடாரத்தைச் சேர்ந்தோர். இந்து மதத்தின் மூடநம்பிக்கைகளை கண்டிக்கும் இவர் இஸ்லாத்தில் உள்ள, கிருத்துவத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் கண்டிக்க வேண்டும். இஸ்லாத்திலும், கிருத்துவத்திலும் அடிமைகள் வைத்திருப்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம், கண்டிக்க அவரது நாக்குக்கோ, பேனாவுக்கோ கண்டிப்பாக துணிச்சல் இராது. காரணம் அச்சம்தான்” (1956, சாவர்க்கர் தொகுப்புகள்) என்று கூறினர்.

அநீதிகளைக் குறித்து யாரேனும் பேசினால், அதனை எப்படி இரு மத துவேசமாக வளர்த்தெடுக்கலாம் என்றுதான் சங் பரிவாரம் சிந்திக்கும். தொடக்க காலம் முதலே அவர்கள் இதைத்தான் செய்தார்கள்.

நாட்டில் நிலவும் பொருளாதாரச் சுரண்டல், சாதி, ஆணாதிக்கக் கொடுமைகள் என இவ்விரண்டையும் பாதுகாத்து, ‘இந்துத்துவ வெறியின்’ அடிப்படையில் – அகண்ட பாரதக் கனவோடு அலைவோரே ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள். பொருளாதாரத்தில் பெரும்பணக்காரர்களுக்கும், சாதி மற்றும் ஆணாதிக்கத் தாக்குதல்களில் ஆதிக்க சக்திகளைப் பாதுகாப்பதுமே பாஜகவின், ஆர்.எஸ்.எஸின் தத்துவம். சுதந்திரப் போராட்டத்தில் கோட்சேக்களும், சாவர்க்கர்களும் காலனியாதிக்கத்தின் பக்கம் நின்றார்கள். அவர்களின் தத்துவம் மக்களிடம் அம்பலப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

இப்போதும், கார்ப்பரேட்டுகளின் உதவியோடு கடப்பாறைகளைத் தூக்கிக் கொண்டு முன்வருகின்றனர். அவர்களின் ஆயுதத்தோடு அவர்கள் வருகின்றனர், நாம் நம்முடைய ஆயுதம் கொண்டுதான் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். மும்பையில் அதனை நாம் நடைமுறையில் கண்டோம். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், கால்நடையாகவே ஒரு நெடும்பயணத்தை மேற்கொண்டு, இந்தியாவின் ஆன்மாவை உலுக்கியெடுத்தார்கள். அதுதான் இடதுசாரி தத்துவத்தின் வீச்சு. அந்தப் பெரும்படை, தன் சக மக்களை நேசித்தது. மும்பையின் மாணவர்கள், போக்குவரத்து என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு தன் எதிரி யாரென்று சரியாக குறிபார்த்து வீழ்த்தியது.

இப்பொழுது உத்தரப்பிரதேசத்தில் இந்தப் போர் துவங்கியுள்ளது. லக்னோ சலோ என்ற அந்த விவசாயிகளின் கோசம் நாடு முழுவதும் எதிரொலித்திருக்கிறது.சோறு படைப்பவன் தனக்கே சோற்றுக்கு வழியின்றியும், வாங்கிய கடனைக் கட்ட முடியாமலும், தற்கொலைக்குத் தள்ளப்படும் கொடுமையை நிறுத்தும் போராட்டம் இந்தக் கொடுமைக்கு காரணமானவர்களான பா.ஜ.க ஆட்சியாளர்களுக்கு எதிராக மாற வேண்டும், மாறும்.

“செப்புமொழி பதினெட்டுடையான் ஆயின் சிந்தனை ஒன்றுடையான் என அன்று சுதந்திரப் போராட்டத்தில் ஒலித்த கோசம் இன்று மதவெறி வன்முறையாளர்களுக்கு எதிராக ஒலிக்கத் துவங்கியுள்ளது. ஆம், அவர்கள் சிலைகளைத் தகர்க்கலாம், நமது சிந்தனைகளைத் தகர்க்க முடியாது.

Leave a Reply

You must be logged in to post a comment.