கொழும்பு:
இலங்கை நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை,வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதுவதற்காக இலங்கை-வங்கதேசம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இலங்கை அணி 41 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.இலங்கை அணி 100 ரன்களை கடப்பது சந்தேகம் தான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திசாரா பெரேரா-குசால் பெரேரா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி,தமிம் இக்பாலின் அரைசத உதவியால் 5 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.தமிம் இக்பால் ஆட்டமிழந்தவுடன் மஹமதுல்லா மட்டும் தனி ஒருவராக போராட,மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் சீட்டுக்கட்டைப் போல சரிந்தனர்.விக்கெட்டுகள் சரிந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் மஹமதுல்லா இலங்கை அணியின் பந்துவீச்சை சின்னாபின்னமாகினர்.
கடைசி ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.கடைசி ஓவரை உதானா வீசினார்.முதல் பந்து பவுன்சராக பறந்ததால் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ரஹ்மான்,இரண்டாவது பந்தில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது பந்தை நோ-பால் கொடுக்கும்படி கேட்டு வங்கதேச வீரர்கள் நடுவரிடம் முறையிட,இலங்கை வீரர்கள் அதை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆனாலும் நடுவர் இரண்டாவது பந்தை நோ-பால் கொடுக்க மறுத்து விட்டார்.மூன்றாவது பந்தை மஹமதுல்லா பவுண்டரிக்கு விரட்ட,கடைசி 3 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது.நான்காவது பந்தில் 2 ரன்கள் எடுக்க,கடைசி இரண்டு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது.

ஐந்தாவது பந்தில் மஹமதுல்லா சிக்ஸர் விளாச வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.19.5 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.18 பந்துகளில் 43 ரன்கள் விளாசிய மஹமதுல்லா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதன் மூலம் வங்கதேச அணி 18-ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா இந்தியாவுடன் மோதுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.