===அ. குமரேசன்====
“அறிவியலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் நூறு மணி நேரத்தைக் குழந்தைகளோடு செலவிட வேண்டும்,” என்று அறிவுரை கூறியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. “அது சமுதாயத்தில் அறிவியல் பரவுவதற்குத் தூண்டுதலாக இருக்கும்,” என்று அவர் அந்த வேண்டுகோளுக்கான நோக்கத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இம்பால் நகரில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் 105வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதல் நாளன்று (மார்ச் 16) மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அறிவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார் மோடி. “ஆராய்ச்சியும் வளர்ச்சியும்” என்ற பதம் இந்தியச் சூழலில் “வளர்ச்சிக்கான ஆராய்ச்சி” என மாற வேண்டும் என்று மோடி தனது சொல்லாடல் திறனைக் காட்டினார். இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவோடு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அறிவியலாளர்கள் தங்களது ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து நிலத்திற்கு வரவேண்டும் என்றார்.குழந்தைகள் குறித்த அக்கறையும் அதில் அறிவியலாளர்களின் பங்களிப்பு பற்றிய ஆலோசனையும் நாட்டின் பிரதமரிடமிருந்து வருவது நல்லதுதான். அறிவியல் ஆராய்ச்சிகளின் பலன்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் துணையாகுமானால் யாராவது வேண்டாமெனச் சொல்வார்களா என்ன? அறிவியலாளர்கள் எதிர்பார்க்கக்கூடியது என்னவாக இருக்கும் என்றால், இந்தக் கருத்துகள் அறிவியல் கண்ணோட்டமுள்ள ஒருவரிடமிருந்து வந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான்.

நிலத்திற்கு வந்தவர்களின் பரிந்துரை
இந்தியாவில் அரசு அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் போதுமான அளவுக்கு முதலீடு செய்வதில்லை என்ற புலம்பல் அறிவியலாளர்களிடமிருந்து வருவது நின்றபாடில்லை. இதனாலேயே, பல வல்லுநர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் பறக்கிறார்கள். அது வெறும் வருவாய்க்காக மட்டுமல்ல பிரதமர் அவர்களே, அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு உலகத்திற்குப் புதிய கண்டுபிடிப்புகளை வழங்க வேண்டும் என்ற ஈடுபாட்டிற்காகவும்தான். விண்வெளியில் செயற்கைக்கோள்களை நிறுவுவது போன்ற பெருந்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது போல் அறிவியல் சார்ந்த பிற துறைகள் கவனிக்கப்படுவதில்லையே?

ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து நிலத்திற்கு வருமாறு அறிவியலாளர்களை அழைப்பதும் ஏற்கத்தக்கதுதான். அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு அவ்வாறு நிலத்திற்கு வந்து ஆராய்ந்ததன் அடிப்படையில் அளித்த பரிந்துரைதான், விவசாயிகளின் அவலத்தை மாற்ற அவர்களது விளைச்சல்களுக்கான உற்பத்திச் செலவோடு 50 விழுக்காடு ஆதாயம் சேர்த்துக் கொள்முதல் விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்பது. அதை ஏன் மத்திய அரசு மதிக்கவில்லை? பிறகு எப்படி அறிவியலாளர்கள் நிலத்திற்கு வருவார்கள்?

ஆண்டு முழுக்க ஆக்கிரமிப்பது…
அதையெல்லாம் கூட அப்புறம் விவாதிக்கலாம். இப்போது குழந்தைகளோடு அறிவியலாளர்கள் ஆண்டுக்கு நூறு மணிநேரமாவது செலவிட அறிவுறுத்தியிருப்பது பற்றிப் பார்ப்போம். ஓராண்டின் 8,760 மணி நேரமும் குழந்தைகளை அறிவியலுக்கும் அறிவியல் கண்ணோட்டத்திற்கும் புறம்பான சங்கதிகள் ஆக்கிரமிக்க வழி செய்யப்பட்டிருக்கிறது. அதிலேயிருந்து ஒரு நூறு மணி நேரத்தைக் கைப்பற்றிக் குழந்தைகளோடு அறிவியலாளர்கள் இருப்பது எப்படி?நாடு தழுவிய அளவில் தொடக்கப்பள்ளிகளிலிருந்து 4.13 விழுக்காடு குழந்தைகள் பாதியிலேயே வெளியேறுகிறார்கள். உயர்நிலைப்பள்ளியிலிருந்து வெளியேறுவோர் 17.06 விழுக்காடு. இவ்வாண்டு ஜனவரியில் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டியிருந்த மத்திய மனிதவளத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா அளித்த புள்ளிவிவரம் இது. 2016ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் பத்தாம் வகுப்போடு பள்ளி வாழ்க்கையை முடித்துக்கொள்கிற குழந்தைகள் சராசரியாக 4 கோடியே 70 லட்சம் பேர். இவர்கள் பள்ளியிலிருந்து வெளியேறுவது குடும்பங்களின் வறுமையால் மட்டுமல்ல, பள்ளிகளின் நிலைமையாலும்தான் என்று கல்வியாளர்கள் திரும்பத் திரும்பக் கூறிவந்திருக்கிறார்கள். நிலைமையை மாற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது? அறிவியல் சோதனைக் கூடங்கள் உள்ளிட்ட அடிப்படையான கல்வி வசதிகள் எத்தனை பள்ளிகளில் உள்ளன?

பள்ளிகளிலிருந்து வெளியேறாமல் தொடர்ந்து படிக்கிற குழந்தைகளுக்குக் கிடைப்பது என்ன? ஒரு சோற்றுப் பதமாக இதோ ஒரு காட்சி: திடீரென சமஸ்கிருத வாரம் கொண்டாட ஆணையிடப்படுகிறது. அதையொட்டி பகவத் கீதை, மகாபாரதம், ராமாயணம் ஆகியவை மாணவர்களிடையே கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றும் பணிக்கப்படுகிறது. “நல்லதோ கெட்டதோ நடக்கிற அனைத்துக்கும் நானே பொறுப்பு, எல்லாம் நான் தீர்மானித்தபடியே நடக்கின்றன” என்று பகவான் சொல்கிற பாடம் குழந்தைகளின் அறிவியல் சிந்தனையை வளர்க்குமா, முடக்குமா?

போதாதற்கு, வேதகாலத்திலேயே ஆகாய விமானங்கள் பற்றிய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி இருந்தது, புஷ்பக விமானங்கள் உண்மையாகவே பறந்தன, ஏவுகணைகள் பாய்ந்தன, கணபதிக்கு யானைத்தலை பொருத்தப்பட்டது அந்தக் கால பிளாஸ்டிக் சர்ஜரியின் மகிமை, அப்போதே ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன, புவியீர்ப்பு விசை அன்றைக்கே கண்டறியப்பட்டுவிட்டது என்றெல்லாம் ஊட்டப்படுவது குழந்தைகளின் அறிவியல் ஊட்டச்சத்து வளர்ச்சியை ஊக்குவிக்குமா உலர்ந்துபோகச் செய்யுமா? பிரதமரே இப்படிப் பேசியிருக்கிறாரே?

வம்புக்கு இழுக்கப்பட்ட ஹாக்கிங்
வேடிக்கை என்னவென்றால், மணிப்பூர் பல்கலைக்கழகத்தில், அதே அறிவியல் மாநாட்டின் தொடக்கவிழாவில் உரையாற்றிய மத்திய அறிவியல் – தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அண்மையில் காலமான உலகப்புகழ் பெற்ற பேரண்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பெருமையைப் பேசுவதாக நினைத்துககொண்டு, “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த இ=எம்சி ஸ்கொயர் என்ற சமன்பாட்டைக் காட்டிலும் உன்னதமான அறிவியல் கோட்பாடுகள் இந்திய வேதங்களில் இருந்திருக்கின்றன,” என்று சொல்லியிருப்பதாகக் கூறி, அரங்கில் கூடியிருந்த அறிவியலாளர்களை அசர வைத்தார். விழா முடிந்து வெளியே வந்த அமைச்சரிடம், அவர் பேசியதற்கு ஆதாரம் தர இயலுமா, ஸ்டீபன் ஹாக்கிங் எங்கே எப்போது அப்படிச் சொன்னார் என்று தெரிவிக்க முடியுமா என்று கேட்டார்கள். “அதைத் தேடுவது உங்கள் வேலை. தேடுங்கள், உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் பிறகு நான் ஆதாரம் தருகிறேன்,” என்று கூறி நழுவினார் அமைச்சர்.ஊடகவியலாளர்கள் உடனே தேடலில் இறங்கினார்கள். அதில், ஸ்டீபன் ஹாக்கிங் பெயரில் ஒரு சமூக ஊடகப் பக்கம் இருக்கிறது, அதிலே அவர் இப்படிச் சொன்னதாகப் பதிவாகியிருக்கிறது என்று தெரியவந்தது. தொடர்ந்து தேடியபோது கிடைத்த அடுத்த தகவல், அந்த சமூக ஊடகப் பக்கம் ஹாக்கிங்க பெயரால் பதிவேற்றப்பட்டு வந்த ஒரு போலியான பக்கம்! யாரோ ஒரு ஹரி என்பவர் அந்தப் போலிப்பக்கத்தைக் கையாண்டுவந்திருக்கிறார். போலிப்பக்கத்திற்கான இணைப்பு அடையாளம் ‘ஸ்டீபன் ஹாக்கிங்’ என்று உள்ளது. உண்மையான இணைப்பு அடையாளமோ ‘ஸ்டீபன் ஹாக்கிங்@ஸ்டீபன்ஹாக்கிங் என்பதையும் ஊடகவியலாளர்கள் வெள்ளியன்று மாலையே கண்டுபிடித்துவிட்டார்கள்.

போலிப் பக்கத்தில், சிவராம் பாபு என்ற வேத வல்லுநர் ஒருவர் 2011ல் எழுதிய ஒரு புத்தகத்தைப் படித்த ஹாக்கிங், வேதத்தில் ஐன்ஸ்டீனின் சமன்பாட்டைக் காட்டிலும் மேலான அறிவியல் கோட்பாடுகள் இருப்பதாகத் தானே கூறுவது போலப் பதிவாகியுள்ளது. சிவராம் பாபு பின்னர் ஹாக்கிங்குக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பித் தனது நன்றியைத் தெரிவித்து, இன்னொரு புத்தகம் அனுப்புவதாகவும் அதனைப் படித்துவிட்டுக் கருத்துக்கூறுமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்து ஸ்டீபன் ஹாக்கிங் அலுவலகப் பணியாளர் அனுப்பிய மின்னஞ்சலில், ஹாக்கிங்குக்கு இப்படி நிறைய ஆவணங்கள் வந்து குவிவதால் அவற்றையெல்லாம் படித்துக் கருத்துச் சொல்வது இயலாத செயல் பணிவோடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது!

ஆக வேதம் பற்றி ஸடீபன் ஹாக்கிங் எதுவும் சொல்லவில்லை. ஆனால், 2001ல் புதுதில்லிக்கு வந்த ஹாக்கிங், அங்கே தனது கணினி உதவிக்குரலில் நிகழ்த்திய உரையில், “பெரும்பாலான அறிவியலாளர்கள் சோதிடத்தை நம்பாததற்குக் காரணம் என்னவென்றால், பரிசோதனை அடிப்படையில் நிறுவப்பட்ட நமது கோட்பாடுகளோடு அது ஒத்துப்போகவில்லை என்பதேயாகும்,” என்று தெளிவாகக் கூறினார். ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற தமது புத்தகத்தின் முதல் பாகத்தின் முடிவில், ”பேரண்டம் குறித்த எனது ஆராய்சிசியின் நோக்கம் கடவுளின் மனசை அறிவதே,” என்று கூறி பலரையும் திகைக்க வைத்து, இரண்டாம் பாகத்தின் நிறைவாக, ”இந்த அறிவியல் உண்மைகள் அனைத்தும் இப்பேரண்டத்தைப் படைக்கக் கடவுள் என்றொருவர் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று காட்டுகின்றன,” என்று தெளிவுபடுத்தியவர் ஹாக்கிங். அவர் பெயரால் ஒரு சமூக ஊடகப் பக்கத்தை நடத்தியது மோசடி என்றால், அறிவியல் மாநாட்டில் அவர் பெயரை அமைச்சர் இப்படிப் பயன்படுத்தியதை என்னவென்பது?

இந்தியாவின் அரசமைப்பு சாசன முன்னுரையில், அறிவியல் மனப்பாங்கு உள்ள சமுதாயத்தைக் கட்டுவது ஒரு லட்சியமாகக் கூறப்பட்டிருக்கிறது. அதைக் கட்டுவதற்கு அடிவாரமாகத் தேவைப்படுவது, அறிவியல் மனப்பாங்குக்கு எதிரான பிற்போக்குக் கருத்துகளும் பொய்யான தகவல்களும் அகற்றப்பட்ட தளமாகப் பண்படுத்துவதுதான். அப்போதுதான் அறிவியலாளர்கள் குழந்தைகளிடம் செல்ல முடியும்.

Leave a Reply

You must be logged in to post a comment.