வீராணம் ஏரியில் தண்ணீர் வேகமாக வறண்டு வருவதால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது சனிக்கிழமை முதல் நிறுத்தப்படுகிறது.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி அமைந்துள் ளது. இந்த ஏரி தண்ணீர், இப்பகுதியில் விவசாய பாசனத்திற்கு மட்டுமின்றி, சென்னை மக்களின் குடிநீர் தேவையை யும் பூர்த்தி செய்து வருகிறது.கடந்த ஆண்டு கோடையின் கடும் வறட்சியால் வீராணம் வறண்டது. பின், பருவ மழை போதிய அளவு பெய்ததால், கடந்த டிசம்பர் மாதத்தில், ஏரி முழு கொள்ளளவான 47.5 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்திற்கு போக தினமும் 78 கன அடி வீதம், சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.

நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து கடந்த ஜனவரி முதல் ஏரிக்கு தண்ணீர் வரத்து நின்றதால், வீராணத்தில் படிப்படியாக நீர் மட்டம் குறைந்தது. தற்போது ஏரி 39.05 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் ஏரி வறண்டு குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் சென்னைக்கு குடிநீருக்கு அனுப்பபடும் தண்ணீரின் அளவு கடந்த 11ம் தேதி முதல், படிப்படியாக, 70, 54, 44, 37, 27 கன அடி என குறைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை வரை 18 கன அடி தண்ணீர் மட்டுமே அனுப்பப் பட்டுள்ளது.இந்நிலையில் சனிக்கிழமை காலை அல்லது மதியத்திற்குள் வீராணம் ஏரியில் இருந்து, சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக சேத்தியாத்தோப்பில் இருந்து பண்ருட்டி வரை, ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்துளை போர்களில் இருந்தும், என்எல்சி சுரங்க தண்ணீரை வலாஜா ஏரியில் தேக்கியும் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாதவன் கூறுகையில் வீராணம் ஏரியில் தண்ணீர் வறண்டதால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகளும் வறண்டுள்ளனர். நெற்பயிரில் கதிர் வரும் நேரத்தில் ஏரியின் கிழக்கு பகுதி மற்றும் கடைமடையில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். பயிரை காக்க விவசாயிகள் தண்ணீர் கேட்டு போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நெய்வேலி, வடலூர், குறிஞ்சிபாடி, புவனகிரி உள்ளிட்ட வட்டப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் என்எல்சி சுரங்க தண்ணீரை வாலாஜா ஏரி,பெருமாள் ஏரிகளில் தேக்கி விவசாயம் செய்துவருகிறார்கள். எனவே அவர்கள் பயன் படுத்தும் இந்த வாலாஜா ஏரி தண்ணீரை சென்னைக்கு அனுப்பினால் இந்த பகுதியில் உள்ள மொத்த விவசாயிகளும் கடுமையாக பாதிப்பு அடைவார்கள். மேலும் உணவு பொருட்கள் உற்பத்தியில்லாமல் மோசமான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை ஏற்படும். எனவே அரசு விவசாயிகள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார்.

  • காளிதாஸ்

Leave a Reply

You must be logged in to post a comment.