வேளாண்மைத் துறைக்கென்று வரும் நிதியாண்டில் 8 ஆயிரத்து 916 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக் கையை தாக்கல் செய்த அவர் வேளாண் துறை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

நீடித்த நிலையான மானாவாரி வேளாண் மைக்கான சிறப்புத் திட்டத்தில் மேலும் 400 புதிய மானாவாரித் தொகுப்புகளை ஏற்படுத்த ரூ.321 கோடி செலவிடப்படும். வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைக்கும் வகையில் 2 ஆயிரம் புதிய வேளாண் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்படும். இவற்றில் 500 குழுக்கள் 10 கோடி ரூபாய் அரசு நிதியுதவியுடன் 50 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாகத் தரம் உயர்த்தப்படும். பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த நடவடிக்கைகளை விவசாயிகள் ஒருங்கிணைத்து ‘ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தை’ அரசு தொடங்கும்.

50 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் சோதனை முறையில் 5 வட்டாரங்களில் தலா ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத் திற்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்கள் உரிய தொழில்நுட்ப உதவியை வழங்கும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.632 கோடியும், வேளாண் இயந்திரங்களை வாடகை விடும் 500 மையங்களை உருவாக்க ரூ.150 கோடியும், நுண்ணீர்ப் பாசனத்தை மேம்படுத்த ரூ.715 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண் மின்னணு சந்தையுடன் ஒருங்கிணைப்பதற்காக மேலும் 30 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் 8 கூட்டுறவு விற்பனை மையங்களில் மின்னணு வர்த்தக வசதிகள் உருவாக்கப்படும். இவற்றில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த ரூ.159 கோடி செலவிடப்படும். காவிரிப் பாசன கடைமடைப் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும், பயிர் முதிரும் நிலையில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 100 கோடி ரூபாய் மதிப்பில் மேலும் 10 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படும்.

உழவன் செயலி

விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ‘உழவன்’ என்ற அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். சென்னை கிண்டியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ‘அம்மா பசுமைப் பூங்கா’ புதிதாக அமைக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மலர்களுக்கான வணிக வளாகம் புதிதாக அமைக்கப்படும். கடலூர் மாவட்டம், மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு ஒன்று அமைக்கப்படும். தோவாளையில் மலர்களை அறுவடைக்குப் பின் பதப்படுத்தும் அலகு ஒன்று நிறுவப்படும்.

Leave A Reply

%d bloggers like this: