“இதோ நம்மையெல்லாம் உய்விக்க வந்தவன்” ஒருவனை சிலர் அழைத்து வந்தார்கள். கைகளில் இரத்தம் சொட்ட சொட்ட அவன் நின்று கொண்டிருந்தான்.

அவர்கள் தயங்கினார்கள்.

“ஒன்றுமில்லை. இப்போதுதான் ஒரு தாய்க்கு பிரசவம் பார்த்து வருகிறேன்” என்றான்.

அவர்கள் அருகில் சென்றார்கள்.

“கைகளைப் பார்க்காதீர்கள். 56 இஞ்ச் மார்பு உள்ளவனால்தான் உங்கள் வாழ்வை வளமாக்க முடியும். எனக்கு 56 இஞ்ச் மார்பு இருக்கிறது” என்றான்.

அவர்கள் ஆர்ப்பரித்தார்கள். அவனைத் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

நாட்கள் எல்லாம் சோதனைகளாகவே வந்தன. எந்த நல்லதும் நடக்கவில்லை. முன்பிருந்ததை விட வாழ்க்கை மோசமானது.

அவர்களோ தரையில் புழுவாய்த் துடித்துக் கொண்டு இருந்தார்கள். தேவன் வானத்தில் பறந்து கொண்டிருந்தான்.

அம்பு விடுகிறேன் பேர்வழி என வில்லை ஒடித்த பிறகுதான் அவன் ஒன்றுக்கும் ஆகாதவன் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவனைப் பிடித்து மார்பை அளந்தார்கள். 56 இஞ்ச்தான் இருந்தது.

“அவன் பொய் சொல்லி விட்டான். நமக்கு நல்லது செய்பவனுக்கு 56 இஞ்ச் மார்பு இருக்க முடியாது.” என்று அவர்கள் கத்தினார்கள்.

“அப்படியானால் எத்தனை இஞ்ச் மார்பு இருக்க வேண்டும்?” என்றான் ஒருவன்.

“அவனை எங்கு போய்த் தேடுவது?’ என்றான் இன்னொருவன்.

அவர்கள் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தார்கள்.

எத்தனை இஞ்ச் மார்பு இருந்தாலும் அதற்குள் துடிக்கும் ஒரு இதயம் இருக்க வேண்டும் என யாரும் இன்னும் யோசிக்கவில்லை.

Mathava Raj

Leave A Reply

%d bloggers like this: