மகாராஷ்ட்ரா மாநிலம் சமீபகாலங்களில் சந்திக்காத அளவிற்கு அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் உண்மையில் மகத்தான போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது. போராட்டத்தின் வெற்றி, மகாராஷ்ட்ர விவசாயிகள் மற்றும் அனைத்துத்தரப்பு மக்களையும் மட்டுமல்ல, நாடு முழுதும் உள்ள விவசாயிகள் மற்றும் மக்களையும் கவ்விப்பிடித்திருப்பதுடன், அவர்களின் அபரிமிதமான ஆதரவினையும் பெற்றிருக்கிறது.   அதேபோன்று நாடு முழுதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஆதரவினையும் பெற்றிருக்கிறது. நாசிக்கிலிருந்து மும்பை வரை, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் மார்ச் 6 முதல் 12 வரை நடைபெற்ற விவசாயிகளின் நீண்ட பயணம்,  நாடு முழுதும் இயங்கும் மற்றும் மாநிலங்களில் இயங்கும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை  ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் கவனத்தையும் கவர்ந்திடும் அம்சமாக மாறியது. மார்ச் 12 தேதிய ட்விட்டர் பக்கத்தில் அகில இந்திய அளவில் அதிகமானவர்கள் பார்த்த வலைத்தளம் விவசாயிகளின் நீண்ட பயணம் என்பதேயாகும்.

நாசிக்கில்  பல்லாயிரக்கணக்கான பெண் விவசாயிகளுடன் சுமார் 25 ஆயிரம் விவசாயிகளின் அணிவகுப்புடன் தொடங்கிய நீண்டபயணம்,  மும்பையை அடையும் சமயத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் கொண்டதாக நிறைவடைந்தது. பேரணியில் வந்தவர்கள் விவசாய சங்கத்தின் செங்கொடிகள், செம் பதாகைகள் மற்றும் பேரணியின் கோரிக்கைகளைப் பொறித்திருந்த சிவப்பு விளம்பரத்தட்டிகளுடன் தலையில் சிவப்புக் குல்லாய்களுடன் அணிவகுத்து வந்ததானது, செங்கடலே மும்பை மாநகருக்குள் புகுந்துவிட்டதோ என்கிற உணர்வினை பார்த்தவர்கள் மத்தியில் உருவாக்கியது. பேரணியில் அணிவகுத்தவர்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின விவசாயத் தோழர்களாவார்கள். இவர்கள், தங்களுக்கு எப்போதுமே உத்வேகத்தை ஊட்டிவரும் தலைவரான  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரான ஜே.பி. காவிட், எம்.எல்.ஏ.,  தலைமையில் அணிவகுத்து வந்தார்கள். அடுத்ததாக, தானே-பால்கார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும், அவர்களை அடுத்து அகமதுநகர் மாவட்ட விவசாயிகளும் அணிவகுத்து வந்தார்கள்.  பேரணியின் கடைசி இரு நாட்களில் மாநிலத்தின் இதர பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் நீண்ட பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவந்த போராட்டங்களின் உச்சகட்டம்தான் நீண்ட பயணமாகும். இதற்காக விவசாய சங்கத்தின் மாநிலத் தலைமை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  மாநிலக் கவுன்சில் கூட்டம் பிப்ரவரி 16 அன்றிலிருந்தே துல்லியமானமுறையில் திட்டங்களைத் தீட்டத்துவங்கிவிட்டது. பங்கேற்பவர்களுக்கான உணவு தான்யங்கள், எண்ணெய், விறகு முதலானவை பங்கேற்கும் கிராமங்களிலேயே கிராம மக்கள் முன்னதாகவே, சேகரிக்கத் துவங்கிவிட்டார்கள்.

நீண்ட பயணத்தின்போது, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நாள்தோறும் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் தங்கள் தலைவர்களுடன் நடந்து வந்ததும், இவர்களில் பெரும்பாலானவர்கள் காலுக்குச் செருப்புமில்லாது சுட்டெரிக்கும் வெயிலில் தார்ச்சாலையில் இவர்கள் நடந்து வந்ததும், அதனால் அவர்களின் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்து அவதிப்பட்டதும் பார்ப்போர் கண்களை பெரிதும் பாதித்ததுடன், இவ்வாறு விவசாயிகளின் பிரச்சனைகளைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது சொரணையன்று இருக்கின்ற பாஜக தலைமையிலான மாநில அரசாங்கத்தின்மீது ஆத்திரத்தையும் ஏற்படுத்தின.

இவை  அனைத்தும், மும்பை மற்றும் தானே மாநகரங்களில் உள்ள தொழிலாளர் வர்க்கம், மத்தியதர வர்க்கம், தலித்துகள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் இதர பிரிவினர் மத்தியில் அமோகமான பிரதிபலிப்பை ஏற்படுத்தின.    நீண்ட பயணத்தில் வருவோரை வழிநெடுகிலும் மக்கள்  தங்களின் இருகரம் நீட்டி வரவேற்றது மட்டுமல்லாமல், தங்களால் இயன்ற அளவிற்குப் பொருள்களும், பணமும் நன்கொடையாக அளித்தும் மகிழ்ந்தனர். விவசாயிகளின் நீண்ட பயணம் குறித்து மும்பை, தானே, பால்கார் மாவட்டங்களில் இயங்கும் சிஐடியு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் முதலானவை முன்கூட்டியே நன்கு பிரச்சாரம் செய்திருந்தபோதிலும், அவற்றையெல்லாம் மீறி மக்கள் நீண்டபயண விவசாயிகளுக்குப் பேராதரவு நல்கியைதையும் நன்கு காண முடிந்தது.

நீண்டபயணத்தின் இறுதிநாளன்று, மும்பையில் பள்ளியிறுதித் தேர்வெழுதும் மாணவர்களின் தேர்வுகளுக்கு, எக்காரணம் கொண்டும் நீண்டபயணத்தின் காரணமாகத் தடங்கல்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற விதத்தில் பயணக்குழுவினர் தங்கள் பயணத்தை, தானே மாநகரிலிருந்து  மார்ச் 11, காலை 11 மணியிலிருந்து, நடந்து, மும்பையின் இதயப்பகுதியில் அமைந்துள்ள ஆசாத் மைதானத்திற்கு  மார்ச் 12 காலை 6 மணிக்குள் வந்து, பயணத்தை முடித்துக்கொண்டார்கள்.  இது,  மும்பைவாழ் மக்களின் அனைத்துத்தரப்பினர் மத்தியிலிருந்தும் அபரிமிதமான வரவேற்பைப் பெற்றது. மும்பையில் இருக்கின்ற பல்வேறு தரப்பட்ட தலைவர்களும் இதனை வெளிப்படையாகப் பாராட்டினார்கள்.

இவை அனைத்தும் பாஜக தலைமையிலான மகாராஷ்ட்ரா மாநில அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அளவில் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. மார்ச் 12 அன்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ், அமைச்சர்கள் சந்திரகாந்த்  பட்டீல், கிரிஷ் மகாஜன், ஏக்நாத் ஷிண்டே, பாண்டுரங் ஃபண்ட்கார், சுபாஷ் தேஷ்முக் மற்றும் விஷ்ணு சவ்ரா ஆகியவர்களும், பல்வேறு துறைகளைச்சார்ந்த உயர் அதிகாரிகளும் சட்டமன்ற அலுவலகத்தில் விவசாய சங்கத் தலைவர்களுடன் சுமார் மூன்று மணி நேரம் விவாதங்கள் மேற்கொண்டனர். இவ்விவாதங்களின்போது விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு  அளித்துவரும், எதிர்க்கட்சி வரிசையிலிருந்த ராதாகிருஷ்ண விகே பட்டீல் (காங்கிரஸ்),  தனஞ்செய் முண்டே, அஜித் பவார் மற்றும் சுனில் தாட்கரே (தேசிய காங்கிரஸ்), விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிப் பொதுச்  செயலாளரான ஜெயந்தி பட்டீல், எம்எல்சி, ஜனதா தளம் (சரத் யாதவ் குழு) மாநிலத் தலைவர் கபில் பட்டீல்,எம்எல்சி, ஆகியவர்களும் உடன் இருந்தார்கள்.

விவசாய சங்கத்தின் சார்பில் டாக்டர் அசோக் தாவலே, ஜே.பி. காவிட்,எம்எல்ஏ, சிஐடியு முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நரசய்யா ஆதாம், மற்றும் மாநில நிர்வாகிகளும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் இந்திரஜித் காவிட் ஆகியவர்களும் பங்கேற்றார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும் நீண்டபயணத்தில் உண்மையில் பங்கேற்றவர்களாவார்கள். இவர்களுடன் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மனோகர் முலே மற்றும் சிஐடியு மாநிலத் தலைவர் வினோத் நிகோலே ஆகியோரும் நீண்டபயணத்தில் பங்கேற்றிருந்தார்கள்.

தற்போதைய ஆட்சியாளர்களிடம் ஏற்கனவே இருந்த கசப்பான அனுபவங்களின் காரணமாக, விவசாய சங்கம் மிகவும் தெளிவானதொரு முடிவினை எடுத்திருந்தது. அதாவது, அரசுத்தரப்பிடமிருந்து எழுத்துபூர்வமான உறுதிமொழிகள் இன்றி போராட்டத்தை விலக்கிக் கொள்ளக்கூடாது என்று மிகத் தெளிவாக இருந்தது. இதன்காரணமாக பேச்சுவார்த்தைகள் முடிந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக, தலைமைச் செயலாளரின் கையொப்பத்துடன் அனைத்துக் கோரிக்கைகள் குறித்தும் எழுத்துபூர்வமான உறுதிமொழி அரசுத்தரப்பில் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவசாயிகள் திரண்டிருந்த ஆசாத் மைதானத்திற்கு அரசுத்தரப்பில் மூன்று அமைச்சர்கள், சந்திரகாந்த் பட்டீல், கிரிஷ் மகாஜன் (பாஜக) மற்றும் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனை)  ஆகியோர் வந்திருந்து ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை அளித்தார்கள். மேலும் இந்த ஒப்பந்தத்தை முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்திடவேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தினோம். அதனையொட்டி முதலாமைச்சர் மார்ச் 13 அன்று ஒப்பந்தத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துதல், நாசிக், பால்கார் மற்றும் தானே மாவட்டப் பழங்குடியினமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் ஆறுகள் இணைப்புத் திட்டமுன்மொழிவு, விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்குக் கட்டுப்படியாகக்கூடியவிதத்தில் விலைநிர்ணயம், கோவில் நிலங்கள், கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் நிலங்கள், வயது முதிர்ந்தோருக்கான ஓய்வூதியம், பொது விநியோக முறை, இயற்கைப்பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விதர்பா மற்றும் மரத்வடா பகுதிகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகள், முதலியவை குறித்து துல்லியமான உறுதிமொழிகள் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டிருக்கிறது.

நிறைவாக, ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் வெற்றிப் பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநில செயலாளர் நரசய்யா  ஆதாம், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அம்ரா ராம், இணைச்செயலாளர்கள் விஜு கிருஷ்ணன், புகழ்பெற்ற பத்திரிகையாளர் பி.சாய்நாத், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவலே, துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், சிஐடியு துணைத் தலைவர் டாக்டர் டி.எல். கராத், நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.ராகேஷ், விவசாய சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் அஜித் நாவலே மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளின் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மகாராஷ்ட்ரா மாநில விவசாயிகளின் கோரிக்கைகள் என்பவை உண்மையில் இம்மாநில விவசாயிகளின் கோரிக்கைகள் மட்டுமல்ல. நாடு முழுதும் உள்ள அனைத்து விவசாயிகளின் கோரிக்கைகளுமாகும். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றிடும் மத்திய பாஜக அரசாங்கத்தால் நாடு முழுதும் உள்ள விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே நாடு முழுதும் உள்ள விவசாயிகளும், மகாராஷ்ட்ர மாநில விவசாயிகளின் போராட்ட வெற்றியிலிருந்து உத்வேகம் அடைந்திருக்கிறார்கள். இதனையொட்டி தங்கள் எதிர்காலப் போராட்ட வியூகங்களுக்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மகாராஷ்ட்ர மாநில விவசாயிகளின் நீண்ட பயணத்திற்கு நாடு முழுதும் உள்ள அனைத்துத்தரப்பினரும் அமோக ஆதரவினை அளித்திருப்பது இதனைத்தான் பிரதிபலிக்கிறது.

போராட்டக்களத்தில் ஒரு போர்முனையில் வெற்றிபெற்றிருக்கிறோம். எனினும் யுத்தம் தொடர்கிறது. இந்தப் போர்க்களத்தில் பெற்ற வெற்றியைத்தொடர்ந்து, நாடு முழுதும் மேலும் வலுவானமுறையில் மேலும் உறுதியுடன் விவசாயிகளின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல சபதமேற்போம்.

(தமிழில்: ச. வீரமணி)

Leave a Reply

You must be logged in to post a comment.