மாநிலங்களுக்கு இடையேயான சிறப்புப் பசுமை மின்வழித் தடத் தினை நிறுவிடவேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க மின்திட்டம், எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள், 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட வடசென்னை அனல் மின்திட்டம் நிலை-iii, தலா 800 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய இரண்டு அலகுகள் கொண்ட உப்பூர் மின்திட்டம் மற்றும் 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட உடன்குடி அனல் மின்திட்டம் நிலை 1 ல் இரண்டு அலகுகள் போன்ற மின் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

மிகையாக உள்ள காற்றாலை மின்சாரத்தை மின் தட்டுப்பாடு உள்ள இதர மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல ஏதுவாக மாநிலங்களுக்கு இடையேயான சிறப்புப் பசுமை மின்வழித் தடத்தினை நிறுவிட மத்திய அரசினை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, மத்திய அரசின் நிறுவனமான எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனத்துடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதன் விளைவாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடுகள் பெறுவதை துரிதப்படுத்த இயலும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: