திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் காவிரியிலிருந்து பிரிந்து செல்லும் கொள்ளிடம் ஆறு தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 165 கி.மீ. தொலைவு பாய்ந்து சென்று, நாகப்பட்டினம் மாவட்டம் பழையறையில் வங்கக் கடலில் கலக்கிறது.மழை, வெள்ளக் காலங்களில் அதிகளவில் தண்ணீர் செல்லும் இந்த ஆறு, மற்ற காலங்களில் வறண்ட நிலையில் காணப்படுகிறது.

எனவே, இந்த ஆற்றில் தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்று கடலூர், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து, 2014-15-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது விதி எண் 110-இன் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடலூர் மாவட்டம், ஆதனூரையும், நாகப்பட்டினம் மாவட்டம், குமாரமங் கலத்தையும் இணைக்கும் வகையில் கொள்ளிடத்தில் ரூ. 400 கோடி யில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, தடுப்பணை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வந்தனர். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவதற்கு நிர்வாக அனுமதியை தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் வழங்கியதோடு, நிர்வாகச் செலவுக்காக ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்தத் தடுப்பணை அமைக்கப்படுவதால் கடலூர், நாகப் பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆற்றுக்குள் பயிர் செய்து வரும் 212 ஏக்கர் நிலம் பாதிக்கப்படும். இதில், சுமார் 180 ஏக்கர் பட்டா நிலம் என்பதால் அதை கையகப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு நகல் கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.கையகப்படுத்தப்படும் நிலத்துக்காக ரூ.31.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய்த் துறையினர் மூலமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 அடி உயரம், 900 மீ. நீளத்துக்கு ஷட்டர் வசதியுடன் இந்த தடுப்பணை அமைய உள்ளதாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தடுப்பணை அமையப் பெற்றால் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 3 மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து பாசன வசதி உறுதி செய் யப்படும். கடல் நீர் ஆற்றுக்குள் உள்புகுவதும் தடுக்கப்படும். கீழணையிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் இந்தத் தடுப்பணை அமைவ தால் வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்கள், கான்சாகிப் வாய்க்கால், நரிமுடுக்கு வாய்க்கால் ஆகியவையும் இந்த தடுப்பணையோடு இணைக்கப்பட்டு தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். இதற்காக திட்ட மதிப்பீட்டில் ரூ.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

You must be logged in to post a comment.