தேனி,
குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்காக சென்றிருந்த சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 36 பேர் சிக்கித் தவித்தனர். அவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் . மேலும் 15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா, ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா, கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச்சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் சிகிச்சை பலனின்றி உயரிழந்தனர். எஞ்சியவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிரி மகன் கண்ணன் (வயது26) என்பவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சிறிது நேரத்தில் சென்னையை சேர்ந்த முத்துமாலை என்பவர் மகள் அனுவித்யாவும் (25) உயிர் இழந்தார். இதைத்தொடர்ந்து  நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்தது.
இந்த நிலையில், இன்று மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரை சேர்ந்த சக்திகலா மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேலம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.