தீக்கதிர்

ஐன்ஸ்டீன் கூறியதைவிட உயர்ந்த தத்துவம் வேதங்களில் உள்ளதாக ஹாக்கிங் கூறியுள்ளார்:அறிவியல் மாநாட்டில் உளறிக்கொட்டிய மத்திய அமைச்சர்..!

இம்பால்:
ஐன்ஸ்டீனுடைய e=Mc2 எனும் சார்பியல் தத்துவத்தை விட உயர்ந்த தத்துவம் நமது வேதங்களில் உள்ளதாக மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளதாக மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உளறிக் கொட்டினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் ‘இந்திய அறிவியல் கழகத்தின்’ 105-ஆவது மாநாட்டின் துவக்க விழா மணிப்பூர் இம்பாலில் நடைபெற்றது. இதனை அத்துறைக்கான மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் துவக்கி வைத்து உரையாற்றினார்.
அப்பொழுது, ஐன்ஸ்ட்டீனுடைய e=Mc2 சார்பியல் தத்துவத்தை விட உயர்ந்த தத்துவம் நமது வேதங்களில் உள்ளதாக மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார் என்று கூறி, மாநாட்டில் பங்கேற்றுள்ள விஞ்ஞானிகளை அதிரச் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, ஸ்டீபன் ஹாக்கிங் அவ்வாறு கூறியதற்கான ஆதாரம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியதாவது:

அதனை நீங்கள்தான் கண்டறிய வேண்டும். அவர் சொன்னதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை பற்றி நீங்கள் கொஞ்சம் உழைத்துக் கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்க இயலா விட்டால், தில்லியில் வந்து என்னிடம் தெரிவியுங்கள். நான் இதை ஒரு பொதுவான அரங்கில்தான் தெரிவித்துள்ளேன். ஸ்டீபன் ஹாக்கிங்கை அந்த இடத்தில் நினைவுகூர வேண்டும் என்று விரும்பினேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் இணையத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் www.servveda.org என்ற இணையதளத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் அவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தளத்தினை “வேதங்களில் அறிவியல் ஆராய்ச்சி” என்னும் அமைப்பு நடத்தி வருகிறது. இந்த அமைப்பினை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆராய்ச்சி அமைச்சகம் அங்கீகரித்துள்ளதாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களே இணையத்தில் உலவவிட்டு, அதுதான் அறிவியல் உண்மை என்று பேசுவது, விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல முன்பு மும்பையில் நடைபெற்ற இந்திய அறிவியல் கழகத்தின்’ 102-ஆவது கூட்டத்தில், 7000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆகாய விமானங்களின் பயன்பாடு இருப்பதாக பாஜக ஆட்சியாளர்களால் தெரிவிக்கப்பட்ட விஷயம் சர்ச்சையினை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.