என்எல்சி நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார். தொழிற் சங்கத் தலைவர் வி.பி.சிந்தன், கே.முத்தையா ஆகியோரது நூற்றாண்டு விழாக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெய்வேலியில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், செயற் குழு உறுப்பினர்கள் ஏ.வேல்முருகன், டி. ஜெயராமன், எம். மீனாட்சிநாதன், வி.மேரி, எம்.முத்துவேல் உள்ளிட் டோர் பேசினர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராத மத்திய அரசு, டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக அறிவித்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க நடவடிக்கை எடுத்து வருவதில் உள்நோக்கம் உள்ளது” என்றார்.என்எல்சி இந்தியா நிறுவனத்தையும், அரசு வங்கிகளையும் தனியார் மயமாக்க முயற்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து அனைத்துக் கட்சிகளையும் ஒன்று இணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று அவர் எச்சரிக்கைவிடுத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.