சென்னை:
வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரிபுரா தேர்தலில் பாஜக வெற்றிபெற்றவுடன் அம்மாநிலத்தில் லெனின் சிலைகள் இடித்துத்தள்ளப்பட்டன. இது தொடர்பான வீடியோ காட்சியுடன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் ‘திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ராஜா தன்னுடைய பதிவை நீக்கினார். தாம் அவ்வாறு போட வில்லை என்றும் அட்மின் செய்த தவறு என்றும் அவர் சப்பைக் கட்டு கட்டினார். ராஜா கருத்தையடுத்து திருப்பத்தூரில் பாஜகவினர் பெரியார் சிலையை உடைத்தனர். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பேசிவரும் எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் அரங்க கிளைச் செயலாளர் திருமூர்த்தி, சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்திலும், காவல்துறை துணை ஆணையரிடமும் கடந்த 10 ஆம் தேதி புகார் அளித்தார். இந்த புகார் மீது எந்தநடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ராஜா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை வெள்ளியன்று (மார்ச் 16) விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.