====அ. அன்வர் உசேன்====
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.விற்கு பேரிடியாக கலவரப்படுத்தியுள்ளது. இயற்கையிலேயே மதச்சார்பின்மை ஆதரவாளர்களுக்கு இந்த முடிவுகள் மகிழ்வை அளித்துள்ளன. குறிப்பாக கோரக்பூரில் பா.ஜ.க.விற்கு கிடைத்த தோல்வி எவரும் எதிர்பாராதது. கோரக்பூர் தொகுதியில் கடந்த 5 தேர்தல்களில் ஆதித்யநாத் வெற்றி பெற்றுள்ளார். அதற்கு முன்பு இரண்டு தேர்தல்களில் ஆதித்யநாத்தின் குரு அவைத்யநாத் வென்றார். மொத்தம் சுமார் 30 ஆண்டுகள் இந்துத்துவ சாமியார்களிடம் இருந்த தொகுதி கோரக்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் வாக்கு வங்கி வீழ்ச்சி
உ.பி.தேர்தல் முடிவுகளுக்கு சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி மட்டுமே காரணம் என பா.ஜ.க. கூறுகிறது. இது உண்மையே! எனினும் மோடியின் மத்திய அரசாங்கம் மீது உள்ள கோபமும் ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசாங்கம் மீது உள்ள அதிருப்தியும் ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளன என்பதும் மறுக்கமுடியாத உண்மை ஆகும். இதனை கீழ்கண்ட வாக்கு விவரங்கள் தெளிவாக்குகின்றன:

                                                                    கோரக்பூர்                                                     பூல்பூர்
      2014                   2018                                          2014                  2018
பா.ஜ.க.                                                51.80%              46.50%                                     52.43%              38.80%
சமாஜ்வாதி+ பகுஜன் சமாஜ்        38.70%              48.90%                                      37.38%             46.90%

கோரக்பூரில் 5.3% வாக்குகளும் பூல்பூரில் 13.6% வாக்குகளையும் பா.ஜ.க. இழந்துள்ளது. அதே சமயம் 9.5% முதல் 10.1% வாக்குகள் சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் கூட்டணி மட்டுமல்ல; பா.ஜ.க. மாநில மத்திய அரசாங்கங்களின் மீதான கோபமும் அதிருப்தியும் மறுக்க முடியாத காரணங்கள் ஆகும்.
இதே போல பீகார் தேர்தலிலும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வாக்குகள் 41.8%லிருந்து 49.2% ஆக உயர்ந்துள்ளது. பா.ஜ.க. மற்றும் நிதிஷ் குமார் கட்சியின் கூட்டு வாக்குவங்கி 49.5%லிருந்து 43.2% ஆக குறைந்துள்ளது. இந்த காலத்தில் லாலுபிரசாத் யாதவ் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார காரணங்கள்:
உத்தரப்பிரதேசம் விவசாயம் சார்ந்த மாநிலம் ஆகும். பரந்து விரிந்துள்ள இந்த மாநிலத்தில் அரிசி, கோதுமை, வெங்காயம், தக்காளி, கரும்பு ஆகியவை முக்கிய பயிர்கள். இந்தியா முழுவதும் உள்ளது போலவே

உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகளின் கடன், விளைபொருட்களுக்கு நியாய விலை இல்லாமை ஆகியவை முக்கிய பிரச்சனைகள் ஆகும். இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் என்றுதான் 2014 மற்றும் 2017 தேர்தல்களில் மோடி – ஆதித்யநாத் கூட்டணி வாக்குறுதி அளித்து விவசாயிகளின் வாக்குகளை பெற்றனர். பா.ஜ.க. அரங்கேற்றிய பல ‘ஜும்லா’க்களில் இதுவும் ஒன்று என்பது அப்பொழுது விவசாயிகளுக்கு தெரியவில்லை.

கடன் தள்ளுபடி என்ற பெயரில் பல விவசாயிகளுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு காசோலைகள் வந்த பொழுது விவசாயிகள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். அவர்களின் விளைபொருட்களும் தகுந்த விலையின்றி தேங்கின. வெங்காயம், தக்காளியை டன் கணக்கில் விவசாயிகள் ஆதித்யநாத் அலுவலகம் முன்பு கொட்டுவது தினசரி வாடிக்கையாக மாறியது. நெருக்கடியை உணர்வதற்கு பதிலாக பா.ஜ.க.வினர் இதனை எதிர்கட்சிகளின் சதி என குற்றம்சாட்டினர்.

அதே போல உ.பி.யை வாட்டும் இன்னொரு பிரச்சனை வேலையின்மை ஆகும். உத்தரப்பிரதேசம் தொழில்துறை அல்லது சேவைதுறையில் முன்னேற்றம் கண்ட மாநிலம் அல்ல! வேலைவாய்ப்புகளுக்கு முக்கிய துறை விவசாயம்தான்! இந்த விவசாயமும் வீழ்ச்சி அடைந்ததால் அனைத்துப் பகுதி இளம் ஆண்களும் பெண்களும் வேலையின்மையால் கோபம் கொண்டிருந்தனர். வேலை வாய்ப்புகளை உருவாக்கி இந்த கோபத்தை தணிக்க ஆதித்யநாத் அரசாங்கம் எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதே போல கோரக்பூர் அரசாங்க மருத்துவமனையில் கொத்து கொத்தாக இறந்த குழந்தைகள் மருத்துவ வசதிகளை தருவதில் ஆதித்யநாத் அரசாங்கத்திற்கு இருந்த அலட்சியத்தை அம்பலப்படுத்தியது. மக்களுக்கு உருவான கோபம் பா.ஜ.க.விற்கு எதிராக வெளிப்பட்டது.

சமூக காரணங்கள் – என்கவுண்ட்டர் ராஜ்யம்:
உ.பி.யில் சில முக்கிய சமூக காரணங்களும் பா.ஜ.க.வின் தோல்விக்கு காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆதித்யநாத் ஆட்சி காலத்தில் சுமார் 500க்கும் அதிகமான சிறியதும் பெரியதுமான மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய கதையாக ஆதித்யநாத்தின் “என்கவுண்ட்டர்” சாம்ராஜ்யம் அமைந்தது. 10 மாதங்களில் 1038 “என்கவுண்ட்டர்கள்” அரங்கேறியுள்ளன. இதில் 238 பேர் காயமடைந்துள்ளனர்; 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 4 “என்கவுண்ட்டர்”கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சில இஸ்லாமியர் அல்லாதோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இஸ்லாமியர்கள்தான் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

என்கவுன்ட்டர் எப்படி நடத்தப்படுகிறது என்பதற்கு ஃபர்குவான் எனும் 33 வயதுள்ள வாலிபரின் வாழ்க்கை ஒரு உதாரணம். இவர் 7 ஆண்டுகள் விசாரணை கைதியாக சிறையில் இருந்தார். திடீரென 08.10.2017 அன்று விடுதலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆச்சர்யம்! ஏனெனில் அவரது விடுதலைக்கு குடும்பத்தினர் எதுவும் செய்யமுடியவில்லை. ஃபர்குவானின் மனைவி மற்றும் குழந்தைகளையும் சேர்த்து அவரது தந்தைதான் பாதுகாக்கிறார். அவரது தொழில் சைக்கிள் ரிக்சா ஓட்டுவது ஆகும். ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடமுடியும் எனும் நிலையில் உள்ள குடும்பம் ஃபர்குவான் விடுதலைக்கு செலவழிக்க இயலவில்லை. இந்நிலையில் ஃபர்குவான் 08.10.2017 அன்று வீடு வந்தார். குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி. ஆனால் 23.10.2017 அன்று அவர் என்கவுண்ட்டரில் கொல்லப்படுகிறார். அவர் கடந்த 5 ஆண்டுகளாக கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் இருந்த தனது கணவர் எப்படி கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருக்க முடியும் எனும் அவரது மனைவியின் நியாயமான கேள்விக்கு எவரும் பதில் தர முடியவில்லை.

இதேபோல சுமித் குர்ஜார் எனும் 20 வயது இளைஞர் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது தலைக்கு ரூ,25.000 சன்மானம் அறிவிக்கப்பட்டது. சில மணி நேரங்களில் அது 50,000 ஆக உயர்த்தப்பட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். அவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் கூறினர். தனது மகன் எவரது வம்புக்கும் போகாத அமைதியானவன் என அவரது தந்தை கூறுகிறார். சுமித்தின் குடும்பம் இந்த என்கவுண்ட்டர் படுகொலைக்கு எதிராக புகாரை தாக்கல் செய்தனர். சில நாட்களுக்கு பிறகு சுமித்தின் இரண்டு சகோதரர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு போடப்பட்டது. சுமித் என்கவுண்ட்டர் புகார் திரும்ப பெற்றால் மட்டுமே பாலியல் வன்கொடுமை வழக்கு அகற்றப்படும் என காவல்துறையினர் பேரம் பேசுகின்றனர். பரிசு தொகைக்காகவும் பதவி உயர்வுக்காகவும்தான் சுமித்தின் என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது என சமூக ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உ.பி. மக்களிடையே இந்த போலி எண்கவுண்ட்டர்கள் கணிசமான கோபத்தை விளைவித்தது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் மீது தாக்குதல்கள்:
இந்துத்துவா மதவெறி சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; இந்து மதத்திற்குள்ளேயே பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் எதிரானது. உ.பி.யில் யாதவ சமூகத்தினர் உட்பட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். சமூக மற்றும் வேலைவாய்ப்புகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. ஆதித்யநாத் ஆட்சியில் தாக்குர் சமூகத்தினரில் மேல்தட்டு வசதி படைத்தவர்கள் செல்வாக்கு பெறுகின்றனர் எனும் கருத்து ஆழமாக காலூன்றியது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. யாதவ சமூகத்தினருக்கும் தலித் மக்களுக்கும் இடையே இருந்த முரண்பாடுகள் பின்னுக்கு போனது. இரு சமூகத்தினருமே தாக்குதலுக்கு உள்ளாவதால் இவர்களிடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை உருவானது.

உ.பி.யில் தலித் மக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கும் அவமானத்திற்கும் உள்ளாயினர். 4 மாதங்களுக்கு முன்பு ஒரு கர்ப்பிணி தலித் பெண் மேல்சாதி தாக்கூர் பெண்ணின் வாளியை தொட்டுவிட்டதால் தீட்டு பட்டுவிட்டது என கூறி கடுமையாக தாக்கப்பட்டு இறந்தார். 2018 ஜனவரியில் தலித் குடும்பத்தினர் மீது குஜ்ஜார் இனத்தவர் 22 சுற்று துப்பாக்கி சூடு நடத்தினர். திரிபுராவில் லெனின் சிலை தகர்ப்புக்கு பிறகு உ.பி.யில் அம்பேத்கார் சிலைகள் பல இடங்களில் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல்கள் தலித் மக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியது. இவையெல்லாம் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக பிரதிபலித்தன.

எதிர்கட்சிகள் முன் உள்ள சவால்!
பா.ஜ.க.வின் கோட்டையிலேயே வெளிவந்துள்ள இந்த முடிவுகள் மதச்சார்பின்மை ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை தோற்றுவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு தேர்தல்களிலும் இது தொடர வேண்டும் என வலுவான கருத்து முன்வைக்கப்படுகிறது. எனினும் ஆர்.எஸ்.எஸ்.-மோடி-அமித்ஷா கூட்டணியின் வஞ்சக வலிமையை குறைத்து மதிப்பிடக் கூடாது. மதம் மற்றும் சாதிய அடைப்படையிலான சேர்க்கைகளை உருவாக்கி தேர்தல்களில் வெற்றி பெறுவதை ஒரு கலையாக மோடி-அமித்ஷா கூட்டணி வடிவமைத்துள்ளது. இதனை எதிர்கொள்வது அவசியம் ஆகும்.

உ.பி. மற்றும் பீகார் தேர்தல் வெற்றி தொடரவும், இந்த வெற்றி உறுதி செய்யப்படவும் வேண்டும் எனில் சில முக்கிய சவால்களையும் சந்திக்க வேண்டிய தேவை உள்ளது. ஒருபுறம் சோனியா காந்தி எதிர்கட்சிகளின் ஒற்றுமைக்காக விருந்து கூட்டம் நடத்துகிறார். மறுபுறம் உ.பி.யில் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு வாக்குகளை பிரிக்கிறது. ஏன் இந்த முரண்பாடு?
மதவாத சக்திகளை தோற்கடிக்க தேர்தல் களம் மிகவும் முக்கியமானது என்பதில் ஐயமில்லை. ஆனால் தேர்தல் மட்டுமே ஒரே களம் அல்ல; ஏனைய களங்களிலும் மதவாதத்தை தோற்கடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பா.ஜ.க. தோல்வி அடைந்த காலத்திலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் வலுவாக வளர்ந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கும் மேலாக நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக மாற்று கொள்கைகளை முன்வைக்க வேண்டிய தேவை எதிர்கட்சிகளுக்கு குறிப்பாக பா.ஜ.க.வை எதிர்க்கும் மாநில கட்சிகளுக்கு உள்ளது. மோடி- அமித்ஷா கூட்டணி பொருளாதார வளர்ச்சி பிம்பத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றால் மக்கள் மதச்சார்பின்மைக்கு குறைந்த முன்னுரிமையே தருவர் என்பது கடந்தகால படிப்பினை. மோடியின் வெற்று பொருளாதார பிம்பத்தின் பக்கம் சாதாரண இந்து உழைப்பாளிகள் கவரப்படுவதை தடுக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக வலுவான கருத்தாக்கம் மிக அவசியம் ஆகும்.
இத்தகைய அணுகுமுறைகளை எதிர்கட்சிகள் எப்படி உருவாக்குகின்றன என்பதில்தான் உ.பி. இடைத்தேர்தல் வெற்றி தொடர்ந்து உறுதிப்படுத்தப்படுமா என்பது அடங்கியுள்ளது. எனினும் இத்தருணத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்கட்சிகள் சாதித்த இந்த வெற்றி அளிக்கும் உற்சாகத்தை உள்வாங்கிக் கொள்வதில் எவ்வித தவறும் இல்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.