2014 பாராளுமன்றத் தேர்தலில் கோரக்பூர், புல்பூர் தொகுதிகளில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாய் பெற்ற வாக்குகளைக் கூட்டினால் கூட, பிஜேபி ஒற்றையாய் பெற்ற வாக்குகளை விடக் குறைவானதாய் இருந்தது. அப்படிப்பட்ட பெரும் வெற்றி பெற்ற பிஜேபி இன்று தோல்வி அடைந்திருக்கிறது.

2014 தேர்தலில் பிஜேபி பெற்ற தனது சொந்த வாக்குகளிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமாய் இப்போது குறைவாய் பெற்றிருக்கிறது.

எனவே, சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிட்டது இன்று பெற்றிருக்கும் வெற்றிக்கு காரணம் என்றாலும், 2014ல் பிஜேபி மீது நம்பிக்கை கொண்டு, அதன் வாக்குறுதிகளில் எதிர்பார்ப்பு வைத்து ஓட்டுப் போட்டவர்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இப்போது மாற்றி ஓட்டு போட்டு இருக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

பிஜேபி அரசின் மதவெறி, ஜாதீய ஒடுக்குமுறை, சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, விவசாயிகளின் நலன் புறக்கணிப்பு என்னும் மக்கள் விரோத நடவடிக்கைகள் பலவும் இந்த படுதோல்விக்கு காரனங்களாகின்றன.

இந்த அரசியல் புரிந்தால், பிஜேபியின் இந்த தோல்வி அதிர்ச்சியானதாய் இருக்க முடியாது. மக்கள் சரியாக முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடியும். அதுதான் இந்த ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதாய் இருக்க முடியும்.

ஆனால், இந்த காரணிகள் எதையும் விவாதிக்காமல், பிஜேபி எப்படி தோல்வியற்றது என இந்த முதலாளித்துவ ஊடகங்கள் விவாதிப்பது கேவலமானதாய் இருக்கிறது. ‘பிஜேபி எப்படி தோற்கும்?’ என்று நம்ப முடியாமல்தான் அவை கதைத்துக் கொண்டு இருக்கின்றன.
மக்களுக்கு விரோதமான பிஜேபியின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசாமல், தேர்தலில் வெற்றி பெறும் உத்திகள் அனைத்தையும் கையாளும் ஆற்றல் பெற்ற கட்சி எப்படி தோற்றது என்று தாங்க முடியாமல் அரற்றுவது போன்ற அயோக்கியத்தனமானது எதுவுமில்லை.

அதுதான் ‘bjpwakeupcall’ (பிஜேபி விழித்துக்கொள்ள அழைப்பு) என்றெல்லாம் ஹேஷ்டேக் வைத்து விவாதிக்கிறார்கள். எப்படி சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் இணைந்து தேர்தலில் நிற்க விட்டீர்கள், அவர்களின் இந்த கூட்டணியை உடைக்க எதாவது செய்யுங்கள், மக்களை இன்னும் ஏமாற்றவும் திசை திருப்பவும் இப்போது திட்டங்கள் தீட்டுங்கள் என்பதுதான் அவர்கள் பிஜேபிக்கு விடும் இந்த அழைப்பு.

அதாவது மக்களை விழித்துக் கொள்ள வைக்காதீர்கள் என்பதைத்தான் அவை பிஜேபிக்கும் மோடிக்கும் உணர்த்திக்கொண்டு இருக்கின்றன.

நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு.

-Mathava Raj

Leave a Reply

You must be logged in to post a comment.