உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களில் நடந்த மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக அடைந்துள்ள படுதோல்வி 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது. மத்திய மோடி அரசு மீதும் உ.பி மற்றும் பீகார் மாநில அரசுகள் மீதும் மக்களின் கடும் கோபத்தை பிரதிபலிப்பதாகவே இந்தத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது.

உ.பி. மாநிலம் கோரக்பூர், பூல்பூர் மக்களவைத் தொகுதிகளில் எம்.பி.க்களாக இருந்த ஆதித்ய நாத் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியாஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமாசெய்து முதல்வர் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இரு தொகுதிகளுக்கான தேர்தலையும் பாஜக தனது கவுரவப் பிரச்சனையாக கருதியது. கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின்போது, பின்பற்றிய அனைத்து கீழ்த்தரமான உத்திகளையும் பயன்படுத்தியது. இந்த இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க பகுஜன் சமாஜ் கட்சிமுடிவெடுத்தது தேர்தலில் பெரும் திருப்பமாக மாறியது. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிவதன் மூலம் பலன் பெற்று வந்த பாஜகவுக்கு இந்த முடிவு பேரிடியாக அமைந்தது. கோரக்பூர் தொகுதியிலும் பூல்பூர் தொகுதியிலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இது ஆதித்ய நாத் நடத்திய காட்டாட்சிக்கு எதிரானது மட்டுமல்ல, மோடி அரசுக்கும் எதிராக உ.பி. மக்கள் எழுதியுள்ள வலிமையான தீர்ப்பாகும்.

பீகார் மாநிலம் அரேரியா மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. கடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்த நிதிஷ்குமார் பாஜகவுடன் சேர்ந்து பீகார் மக்களுக்கு துரோகம் செய்தார். இந்தத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளவேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த மூன்று தொகுதிகளுக்குமான முடிவு எதிர்வரும் தேர்தல்களில் பாஜக பெறப்போகும் தோல்விகளின் துவக்கமாகும். அண்மையில், நடைபெற்ற வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் சகலவிதமான தில்லுமுல்லு, திருகுதாள வேலைகளையும் செய்து பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றியது. பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத இடங்களிலும் கூட குதிரை பேரம் மூலம் ஆட்சி அமைப்பதை ஒருநடைமுறையாகவே பாஜக மாற்றிவிட்டது. இதுகுறித்து, எத்தகைய வெட்க உணர்ச்சியும் அவர்களுக்கு இல்லை.

உ.பி.யில் மக்களை பிளவுபடுத்தி தங்களது மதவெறி அரசியலை பாஜக முன்னெடுத்தது. யோகி ஆதித்ய நாத் அரசு அடுத்தடுத்து மதவெறி அடிப்படையிலான முடிவுகளை மக்கள் மீதுதிணித்தது. இதற்கெல்லாம் உ.பி. மக்கள் நல்லதொரு பதில் தந்துள்ளனர். வடமாநிலங்களில் எழுந்துள்ள இந்த எதிர்ப்புச் சூறாவளி நாடு முழுவதும் பற்றிப் பரவட்டும். மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து செயல்படவேண்டியதன் தேவையை இந்தத் தேர்தல் முடிவு உணர்த்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.