அகர்தலா, மார்ச் 15-
திரிபுராவில் புதிதாக அமைந்துள்ள பாஜக மாநில அரசு ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக, காவல்துறைத் தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் திரிபுரா மாநிலச்செயற்குழு சார்பில், பாதல் சௌத்ரி எம்எல்ஏ, கௌதம் தாஸ் மற்றும் நாராயண் கர் ஆகியோர் திரிபுரா மாநிலக் காவல்துறைத் தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபின்பு, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தன்னுடைய ஜனநாயகவிரோத வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மார்ச் 12ஆம் தேதிமுதல் வன்முறை வெறியாட்டங்களைப் புதிய முறையில் அது செய்துவருகிறது. அன்றையதினம் மாலை, அகர்தலாவில் நிகர்ஜலா என்னுமிடத்தில் அமைந்துள்ள திரிபுரா மோட்டார் போக்குவரத்து ஊழியர்கள்சங்கத்தினை பாஜகவினர் 4ஆம் தேதியிலிருந்தே தங்கள் பூட்டைப் போட்டு பூட்டி வைத்துள்ளதை, மீண்டும் திறந்து, அங்கே ஆயுதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். காவல்துறையினரிடம் பொய் வழக்கு அளித்து, மேற்படி அலுவலகத்தை ரெய்டு செய்து ‘ஆயுதங்களைக்’ கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மார்ச் 13 அன்று லங்க்தோராய் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள எங்கள் கட்சியின் மனுகாட்அலுவலகத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக வதந்தியைப் பரப்பி வந்தனர். காவல்துறையினர் ஒரு நிர்வாக நடுவருடன் வந்து அலுவலகத்தை சோதனை செய்துள்ளனர். சோதனை நடந்துகொண்டிருந்தபோதே, பாஜகவினர் வெளியில் கூட்டமாகக் கூடத் துவங்கியுள்ளனர். காவல்துறையினர் முழுமையாக சோதனை செய்துபார்த்துவிட்டு, ஆட்சேபகரமான அம்சம் எதுவும் இல்லை என்று சான்றிதழ் அளித்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதேபோன்று எங்கள் கட்சியின் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் சாந்திர் பசார் உட்கோட்டத்தில் ஜோலைபாரி அலுவலகத்திலும் ஆயுதங்கள் இருப்பதாக வதந்தியைப் பரப்பியதுடன், அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர். பின்னர் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படையினர் அவர்களை விரட்டியடித்தனர். இதேபோல் மேலும் பல இடங்களில் காவல்துறையினர் எங்கள் அலுவலகங்களை சோதனை செய்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு தேசியக்கட்சியாகும். எங்கள் கட்சி அலுவலகங்களை இயக்குவது என்பது எங்களின் அரசமைப்புச்சட்ட மற்றும் ஜனநாயக உரிமையாகும். எங்கள் ஜனநாயக செயல்பாடுகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல்துறையினரின் கடமையாகும். ஆனால், ஆளும் கட்சியினரின் தூண்டுதலின்பேரில் காவல்துறையினர் எங்கள் கட்சி அலுவலகங்களையும், வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்களையும் சோதனை செய்வது மிகவும் ஆட்சேபணைக்குரியவைகளாகும். இவற்றை ஏற்க முடியாது. புதியவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப்பிறகு இதுவரை எங்கள் கட்சி அலுவலகங்கள் 96 தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன, 367 கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன, 233 கட்சி அலுவலகங்களை பாஜக ஆதரவாளர்கள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர். எங்கள் கட்சி ஊழியர்களின் 1829 வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. 217 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 442 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டபின் எரித்துத்தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. எங்கள் கட்சித் தோழர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் சொந்தமான 35 ரப்பர் தோட்டங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

எங்கள் கட்சியின் சார்பில் வெளிவந்துகொண்டிருக்கும் நாளிதழான தேசர் கதா ஒரு பதிவு செய்யப்பட்ட நாளேடாகும். திரிபுரா மாநில அரசால் ஓர் உயர்ரக வகையிலான நாளிதழ் என்றும் சான்றிடப்பட்டிருக்கிறது. எனினும் புதிய ஆட்சி அமைந்தபிறகு, அதன் விற்பனையைத் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் நீங்கள் இருப்பதால் ஆட்சியாளர்களின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட நீங்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். எங்கள் கட்சி அலுவலகங்கள், எங்கள் கட்சித் தோழர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களை ஏவியுள்ளவர்கள்மீது தாங்களாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். பாஜகவினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ள எங்கள் தோழர்களுக்கு உரிய பாதுகாப்பினை நல்கிட வேண்டும். கடைகளைத் திறப்பதற்கு கடைக்காரர்களுக்கு உரிய பாதுகாப்பினை அளித்திட வேண்டும். வன்முறையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். எங்கள் நாளேடு தொடர்ந்து வெளிவர உரியப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் தங்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.