விரைவில் தமிழகம் முழுவதும் இஎஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று இஎஸ்ஐ நிறுவனத்தின் தமிழக மண்டல துணை இயக்குநர் எஸ்.விஜயன் தெரிவித்தார். இஎஸ்ஐ நிறுவனத்தின் 66-ஆவது ஆண்டு நிறைவு விழா ராணிப் பேட்டை கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.விஜயன் பேசியதாவது:-நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்க வேண்டி கொண்டுவரப்பட்டது இஎஸ்ஐ திட்டம். வேலூர் மாவட்டத்தில் 12 இடங்களில் இஎஸ்ஐ மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒரு தொழிலாளி, தான் பணிபுரியும் தொழிற்சாலையிலோ அல்லது தொழிற்சாலைக்குச் செல்லும் வழியிலோ விபத்தில் சிக்கினால், அவருக்கு இலவச மருத்துவமும், பணப்பலனும் வழங்கப்படும். அந்த விபத்தில் தொழிலாளி இறந்தால் அவரது குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இஎஸ்ஐ நிறுவனம் தனியார் காப்பீட்டு நிறுவனம் போல் விதிமுறைகளைப் பார்க்காமல் உடனடியாக அவருக்கான பணப்பலன் வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறது. தொழிலாளி இயற்கையாக மரணமடைந்தால், அவரது ஈமச் சடங்குக்காக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை தொழிலாளர்கள் எங்கு அதிகம் இருக்கிறார்களோ அங்குதான் இஎஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு தவிர வேறெங்கும் தொழில் வளர்ச்சி அடையவில்லை. அதேபோல், ராமநாதபுரத்தில் இஎஸ்ஐ திட்டம் மிகக் குறைவு. இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமரின் உத்தரவின் பேரில் இந்தியாவில் சுமார் 12 மாநிலங்களில் முழுமையாக இஎஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் இஎஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில், உதவி இயக்குநர் நீரஜ்குமார் சிங், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் 66 தொழிலாளர்களுக்கு ரூ. 4.53 லட்சம் மதிப்பிலான இஎஸ்ஐதிட்டத்தின் பணப் பலன்களை வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.