எ.பாபளையம், மார்ச் 15-
எலச்சிப்பாளையத்தில் கோவில் நிலத்தில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையினை அகற்ற கோரி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் பகுதியில் சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். விசைத்தறி மற்றும் விவசாயம் சார்ந்த கூலி வேலையினை செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நெருக்கடியான நிலையில் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த மதுபானக்கடையும், அங்கிருக்கும் கடைகளும் மக்களுக்கு வழிபாடு செய்ய பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திய வண்ணம் தொடர்ந்து பல வருடங்களாக இருந்து வருகிறது. எனவே இந்த மதுபானக்கடையினை மற்றும் இட நெருக்கடி மிகுந்த கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பல முறை அரசுக்கு மனு கொடுத்தும் பல ஆர்ப்பாட்டங்கள் செய்தும் அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பிரச்சனையினை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று திடீரென சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராசிபுரம் திருச்செங்கோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: