கோவை மாநகரின் இதயப்பகுதியாய் உள்ள பங்கஜமில் ஆலை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள பாழடைந்த வீடுகள் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இக்குடியிருப்பில் உள்ள தொழிலாளர்களின் வீடுகளின் ஓட்டை பிரித்து கொள்ளையடிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் இந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். ‘’ இன்னைக்கு யார் வீட்டுல இறங்குனானுக’’ என்கிற வசனம் கடந்த ஒருமாத காலமாக இம்மக்களின் பகிர்தல் மொழியாக பிரபலமடைந்திருக்கிறது.

தேசிய பஞ்சாலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் ஏழு பஞ்சாலைகள் உள்ளன. அதில் கோவையில் 5 பஞ்சாலைகள் இருக்கின்றன.அதில் ஒன்று புலியகுளம் பகுதியில்உள்ள பங்கஜமில். இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கென கணேசபுரம் சுப்பையன் வீதியில் குடியிருப்புகள் உள்ளது. மூன்று ஏக்கர் பரப்பளவில் முன்நூறுக்கும் அதிகமான வீடுகள் உள்ள இக்குடியிருப்பில் தற்போது நூற்றுக்கும் குறைவான வீடுகளிலே தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். மற்ற வீடுகள் காலியாக உள்ளதால் பராமரிப்பு இல்லாத நிலையில் புதர் மண்டி பாழடைந்து வருகிறது. இந்த பாழடைந்த வீடுகளே தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், தினமும் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை, ஒட்டுமொத்த குடியிருப்புப் பகுதியும் மர்மநபர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. எப்போது வேண்டுமானாலும் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோக்களை உடைத்து கையில் அகப்பட்டதை அள்ளிக்கொண்டு சென்று விடுகிறார்கள். திருட்டில் ஆரம்பித்த பிரச்சினை இன்று பாழடைந்த வீடுகளில் பாலியல் தொழில் வரை நடக்கிறது. ஆனால் இதுவரை ஒருவர் கூட பிடிபட்டதில்லை என்கின்றனர் வேதனையோடு. தொடரும் திருட்டு, சமூகவிரோத செயல்களால் அச்சத்தில் உறைந்துள்ள இம்மக்கள், மில் நிர்வாகத்திடமும், புலியகுளம் காவல்நிலையத்திலும் பல முறை புகார்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரும் தினமும் ரோந்து வருவதாகக் கூறுகிறார்கள். இருந்தும் வழக்கம்போலவே திருட்டு தொடர்கிறது. தற்போது இந்த சமூக விரோதிகள் செல்போனில் காவல்துறையினரிடம் உள்ள வாக்கி டாக்கியில் வரும் ஒலியை செல்போனில் பதிவு செய்து கொண்டு இரவு நேரத்தில் ஒலிக்கின்றனர். வீட்டில் இருப்பவர்களும் காவல்துறையினர் ரோந்து வருகிறார்கள் என்று நினைத்து நிம்மதியாக இருந்தோம் நேற்றுதான் தெரிந்தது. சமூக விரோதிகள் எங்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்கள் என்று. ‘வியாழனன்று காலை கூட லதாஎன்பவரது வீட்டில் கூரை வழியாக ஒரு நபர் இறங்க முயன்று, கூச்சல் சத்தம் கேட்டு தப்பியுள்ளார். மற்றொரு பெண்ணின் வீட்டில் ரூ.13,500 பணம், ஏடிஎம் அட்டை, முக்கியமான ஆவணங்களை திருடிச் சென்றுவிட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே ஒவ்வொரு நாள் இரவும் திக், திக் என்று இருக்கிறது. பல வீடுகளில் குழந்தைகள் இருக்கிறார்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நிம்மதியாக தூங்கக்கூட முடிவதில்லை’ என்கிறார் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர்.

இக்கட்டான சூழலில் வேறு வழியில்லாமல் வீட்டுக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் காவல் பணிக்கு இளைஞர்கள் தயாராகியுள்ளனர். ‘போலீஸாரின் நடவடிக்கையை எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். இதுவரை ஒரு ஆளைக்கூட இங்கு வந்து போலீஸ் பிடித்ததில்லை. நாங்களே எங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் தினமும் காவல் காத்துக் கொண்டிருக்கிறோம்’ என்கின்றனர் இளைஞர்கள்.பங்கஜ ஆலை மேலாளர் ரமேஷ் கூறும்போது, ‘பாழடைந்த வீடுகளை மட்டும் இடிக்க அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும். மாறாககாலி வீடுகளையும் தொழிலாளர்களுக்கு ஒப்படைத்து, புனரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் சரிசெய்து கொடுக்கிறோம். அதை குடியிருப்புப்பகுதிக்கான கமிட்டி கவனிக்கிறது. பாதுகாப்பு வசதிகளை போலீஸார் மூலமே பலப்படுத்த வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் ராஜனிடம் கேட்டபோது, ‘தொடர்ச்சியாக அப்பகுதியில் போலீஸார் ரோந்து பணி நடைபெற்று வருகிறது. பிரச்சினை தீவிரம் கருதி கூடுதல் கவனம் செலுத்துகிறோம்’ என்கின்றனர். தினம் தினம் திகிலோடு நாட்களை நகர்த்தும் பங்கஜஆலை தொழிலாளர் குடும்பங்களின் அச்சத்தை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் தற்போதைய ஒரே கோரிக்கை.

– அ.ர.பாபு

Leave a Reply

You must be logged in to post a comment.