நாமக்கல், மார்ச் 15-
நாமக்கல் அருகே முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து, பொம்மசமுத்திரம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பொம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பொம்மசமுத்திரம், போயர்தெரு, இராமநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊராட்சிசார்பில் முறையான குடிநீர் வழங்கவில்லை. இதுகுறித்து இப்பகுதி பெண்கள் தண்ணீர் திறந்து விடக்கோரி ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டால், முறையிடும் பெண்களை அலட்சியப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்ததையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதனன்று காலிக்குடங்களுடன் பொம்மசமுத்திரம் ஊராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கை வைக்கும் பெண்களை தொடர்ந்து அலட்சியம் செய்யும் ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து தகவல் அறிந்து வந்த சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாசம், சேந்தமங்லம் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் முறையான குடிநீர் வழங்கப்படும், ஊராட்சி செயலாளர் சிவக்குமார் இடமாற்றம் செய்யப்படுவார் என உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: