சென்னை, மார்ச் 15-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் வியாழனன்று (மார்ச் 15) பிற்பகல் 3.30 மணிக்கு கூடியது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசினார். “பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால் தலைமைச் செயலாளர், நீர்வள ஆதாரத் துறை செயலாளர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக மத்திய அரசிட மிருந்து கடிதம் வந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் தமது பிரதிநிதிகளை அனுப்பியதோடு அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நமது வாதத்தை முன்வைத்தோம்” என்று முதல்வர் கூறினார்.

உச்சநீதிமன்றம் 6 வாரக் காலத் திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றுகெடு விதித்துள்ளதால் கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவதாகக் குறிப்பிட்ட முதல்வர், “காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படியும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உச்சநீதிமன்ற தீர்ப்பில்குறிப்பிட்டுள்ளபடி 6 வாரங்களுக் குள் மத்திய அரசு அமைத்து அவற்றை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்’’ என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் இந்தத் தீர்மானத் தை வரவேற்றுப் பேசினர். இதை யடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: ஸ்டாலின்
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,‘ சட்டமன்றத்தில் இந்த சிறப்புக் கூட்டத்தை மார்ச் 9ஆம் தேதிக்கு முன்பே கூட்டியிருக்க வேண்டும். சற்று காலதாமதமாக கூட்டினாலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும், விவசாய சங்கங்களும் துணைநிற்கும்’’ என்றார்.  “தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை அவர் ஏற்காதது ஜனநாயகத்திற்கே நெருக் கடியான தருணமாகும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் துளியும் அக்கறை காட்டாமலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல் படுத்த முன்வராததும் கடும் கண்டனத்திற்குரியது” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசும், பிரதமரும் மேலும் கால தாமதம் செய்யாமல், வேறு யுக்திகளை கையாளாமல் இருக்க வேண்டும். தமிழகத்தை அவமதிக்கும் மத்திய அரசுக்கு எதிராகவும், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறும்பட்சத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு திமுக தயாராக உள்ளது. அப்படி ஒரு நெருக்கடியை மத்திய அரசு உரு வாக்கக் கூடாது எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். ஸ்டாலின் பேசியதையே வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராமசாமியும் பேசினார். இதன்பின்னர் சட்டமன்ற கட்சித்தலைவர்கள் உரையாற்றினர். பின்னர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.

Leave a Reply

You must be logged in to post a comment.