கோவை:
முழுமையான மருத்துவ காப்பீடு வழங்கிடக்கோரி அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் புதனன்று பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிசிச்சை இரண்டிற்கும் முழுமையான செலவுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு ஒப்பந்தத்திற்கு உட்படாத மற்றும் வெளிமாநில மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான முழுமையான செலவை காப்பீட்டு நிறுவனம் திரும்ப வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படாத சத்துணவு, அங்கன்வாடி, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி ஓய்வூதியர்களை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.அரங்கநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்ட செயலாளர் எஸ்.மதன், பழனிச்சாமி, பரமசிவன், விவேகானந்தன், சந்திரகாசன், சுப்பிரமணியம் ஆகியோர் பேசினர். திரளானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டு கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமைவகித்தார். மாவட்ட துணை தலைவர் மணிவேலு, மாநில துணை தலைவர் எஸ்.சந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஈரோடு:
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ச.சங்கரன், மாவட்ட செயலாளர் வ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்று மனு அளித்தனர்.

சேலம்:
சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் கோரிக்கைளை விளக்கிப் பேசினார். முடிவில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தும் மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.