புதுதில்லி,

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2004 முதல் 2007 வரை தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது அவர், தமது அலுவலகப் பயன்பாட்டுக்கான பிஎஸ்என்எல் அதிநவீன தொலைபேசி இணைப்புகளை சன் தொலைக்காட்சிக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசுக்கு 1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவரது சகோதரர் கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப்பொதுமேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 2015 டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 14வது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி 7 பேர் சார்பிலும் சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2017 அக்டோபரில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சிபிஐ 14-வது சிறப்பு நீதிபதி நடராஜன் முன்பாக நடந்து வந்தது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தில்லி மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். ஆனால் சிபிஐ தரப்பில் இதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது  பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Leave a Reply

You must be logged in to post a comment.