திருப்பூர்;
திருப்பூர் தொழில் துறையினருக்கு வங்கிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரைப் பாதுகாக்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் திருப்பூர் எம்.பி. சத்தியபாமா நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பின்னலாடை தொழில்துறை சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இவற்றில் 80 சதவிகிதம் சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலமாக நடைபெறும் ஏற்றுமதியாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலுவதுடன் குறிப்பாக ஓரளவு படித்த கிராமப்புற பெண்கள் உட்பட பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை இந்தத் தொழில்துறை வழங்குகிறது. நாட்டின் ஆயத்த பின்னலாடை ஏற்றுமதிகளில் 22 சதவிகிதமும், பின்னலாடை ஏற்றுமதியாளர்களில் 47 சதவிகிதமும் திருப்பூரை மையமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலத் தீர்வைகளில் கிடைக்கும் சலுகைகள் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதற்கொண்டு திருப்பி அளிக்கப்படாததால் இத்தகைய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடும் பணத்தட்டுப்பாட்டில் உள்ளன. ஜி.எஸ்.டியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை, டிராபேக் விகிதம் ஆகியவை வழங்கப்படாதது இந்த நிறுவனங்களின் மூலதன பணத்தட்டுப்பாட்டுக்கு காரணமாக உள்ளது. இந்த எதிர்மறை காரணங்களால், புதிய ஏற்றுமதி ஆர்டர்களை சந்தைக்கான போட்டி விலையில் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இல்லை, குறிப்பிட்ட நேரத்தில் சரக்குகளை டெலிவரி செய்ய முடியாது என்பதும் நிதர்சன நிலைகளாகும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் கணக்குகள் ஒன்று, சிறப்பு கவனம் தேவைப்படும் கணக்குகள் இரண்டு அல்லது வாராக் கடன் என்கிற வகைகளில் கடன்களை செலுத்தாத நிறுவனங்களை வகைப்படுத்த வங்கிகள் முயல்வது வேதனை அளிக்கிறது. திருப்பி அளிக்க முடியாத நிலையில் இந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருப்பது அவற்றின் தவறு அல்ல. மாநிலத் தீர்வையில் வழங்கப்படும் சலுகைகள், ஜி.எஸ்.டி திருப்பி அளிப்பு, டிராபேக் தொகை உரிய நேரத்தில் வழங்கப்படுவது என அனைத்தும் சரியாக கிடைத்திருந்தால் இந்த நிறுவனங்கள் உரிய நேரத்தில் வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்தியிருக்கும். அரசிடம் இருந்து இந்த நிறுவனங்கள் பெறவேண்டிய தொகையின் அளவையாவது கருத்தில் கொண்டு அந்த அளவுக்காவது இத்தகைய சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களை, கடனைத்திருப்பிச் செலுத்தாத நிறுவனங்கள் என்ற வகைப்பாட்டில் இருந்து விலக்கி வைக்க முனைய வேண்டும். ஆயத்த ஆடைகள் துறைக்கு அரசு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ள போதிலும் அந்தத் தொகை, குறிக்கோளின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உண்மையில் பலன்களை அடிவரை கொண்டு சேர்க்கவில்லை.

எனவே, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தரவேண்டியுள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக அரசு விடுவிக்கவேண்டும், ஜி.எஸ்.டி-ஐ ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் எளிதான வழிமுறையை வகுக்குமாறும், ஆன்லைன் அல்லாத நேரடி கணக்குத் தாக்கல் நடைமுறைக்கு மாற்றாக அமைப்பு ரீதியிலான திருப்பியளிப்பு (ரீஃபண்ட்) நடைமுறையை வகுத்து சிரமங்களை அகற்றுமாறும் மத்திய அமைச்சரிடம் திருப்பூர் எம்.பி.சத்தியபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: