உடுமலைப்பேட்டை:
சாதி மறுப்பு என்ற சிந்தனையால் மேலும் மேலும் உறுதியாக இணைவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில், சாதி மறுப்பு திருமணம்செய்து கொண்டதால் சாதி ஆணவ வெறிக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சங்கர் நினைவாக அவரது மனைவி கவுசல்யா அறக்கட்டளை துவங்கியுள்ளார். அதன் துவக்கவிழா உடுமலை குட்டைத் திடலில் செவ்வாயன்று நடைபெற்றது.

இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இநதிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (மார்ச் 13) தான் கவுசல்யா காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவர் சங்கரை கண்ணெதிரில் சாதிவெறி கொண்டு வெட்டிக் கொலை செய்தார்கள். எத்தகைய மனோநிலையில் கவுசல்யா இருந்திருப்பார்? கொலையாளிகளுக்கும், சாதி வெறி கொண்டு கொலையைத் தூண்டிய பெற்றோர்களுக்கும் தண்டனை பெற்றுத் தருவதில் கவுசல்யா உறுதியாக இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரை நான் சந்தித்தேன்.இத்தகைய சம்பவத்திற்குப் பிறகும், நான் வாழ்ந்து காட்டுவேன் என்பதில் அவர்
உறுதியாக இருந்தார். தற்போது ஒரு படி மேலே போய் சாதி ஒழிப்புக்காக விழிப் புணர்வை உருவாக்க சங்கர் சமூக நீதி என்ற அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறார்.மேடையில் இருக்கக் கூடிய அனைவரும் கவுசல்யாவையும் அவருடைய அறக்கட்டளையையும் முழுமையாக ஆதரிப்போம். அவருக்கு எப்போதும் உறுதுணையாகவும் இருப்போம். சாதி ஆணவக் கொலை என்பது தீண்டாமைக் கொடுமையின் கோர வடிவம்.

இரட்டைக் குவளை, ஆலயத்திற்குள் நுழையத் தடை, ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றாலும் சுயமாகச் செயல்பட முடியாத நிலை  போன்ற பல வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை நீடித்து வருகிறது. ஒரு தலித் குடிமகன் குடியரசுத் தலைவராக வந்துவிடலாம்;
ஆனால் தமிழகத்தில் சில பகுதிகளில் ஒரு தலித் ஊராட்சி மன்றத் தலைவராகக் கூட வர முடியாது! தீண்டாமைக் கொடுமை யை ஒழிப்பதோடு, சாதி ஒழிப்புதான் இறுதியான தீர்வு. சாதி ஒழிப்பு என்ற முழக்கத்தை கவுசல்யா தொடங்கியுள்ள அறக்கட்டளை முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

சாதி ஒழிப்பு,  தமிழ் வாழ்க என்ற முழக்கத்தை அறக்கட்டளை முன்வைக்கிறது. தமிழால் இணைவோம்; சாதி மறுப்பால் மேலும் உறுதியாக கரம் கோர்ப்போம் என்ற நிலை உருவாக வேண்டும். சாதிமறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களை வெட்டுபவர்களும் வெட்டுப்பட்டு வீழ்பவர்களும் தமிழர்கள் தான்; நிலவுடைமையாளர்களும் தமிழர்கள்தான்; இவர்களால் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகும் தலித் விவசாயத் தொழிலாளிகளும் தமிழர்கள்தான்; என்ற நிலையை தமிழ்ச்சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யாருக்கு யார் அரண்?
சாதிக்கு நிலவுடைமை அரணாக உள்ளது. நிலவுடைமைக்கு சாதி அரணாக உள்ளது. இரண்டையும் எதிர்ப்பதன் மூலம்தான் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். வெண்மணியில் கூலி உயர்வுக்காகப் போராடிய தலித் விவசாயத் தொழிலாளிகளை நிலச்சுவான்தார்களும் அவர்களது குண்டர்களும், கூலி உயர்வு தருகிறோம்; செங்கொடியை இறக்குங்கள் என்றனர். இந்த செங்கொடி தான் தீண்டா மைக் கொடுமையின் முதுகெலும்பை உடைத்தது; நாங்கள் மனிதராக நிமிர்ந்து நிற்க முடிந்தது; உயிரே போனாலும் செங்கொடியை இறக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றனர்.அதுதான் வெண்மணி! கவுசல்யாவின் பிரகடனத்தில் வெண்மணியைச் சுட்டிக்காட்டி சாதி ஒழிப்புக்கான போராட்டத்திலும் வர்க்கப் போராட்டத்திலும் இரண்டையும் நடத்த வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். இது பாராட்டுக்குரியது. அவரது பிரகடனத்தில் கே.பி. ஜானகியம்மாள், மணலூர் மணியம்மாள் பற்றி குறிப்பிட்டுள்ளார். பிராமண விதவையான மணியம்மாள் நிலச்சுவான்தார்களுக்கு எதிராக, தலித் மக்களுக்கு ஆதரவாகப் போராடியவர்.

இப்போதும் ஒப்பீட்டளவில் நாகை, திருவாரூர் மாவட்டங்களில்தான் தீண்டா மைக் கொடுமை ஒழிக்கப்பட்டுள்ளது.

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட வர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 187 பேர்  படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2011-16 சட்டமன்றக் கூட்டத்தில் ஆணவக் கொலைகளைத் தடுத்திட தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் இல்லை; எனவே சட்டம் தேவையில்லை என்று
அமைச்சர் பதில் அளித்தார். ஆனால் சாதி ஆணவக் கொலை தொடர்கிறது.

தனிச்சட்டம் எதற்காக?
திருமண வயதான ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளலாம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது. ஆனாலும் கொலைகள் தொடர்கின்றன. எதற்காக தனிச்சட்டம் வேண்டும் என்கிறோம்? இ.பி.கோ. 302 வழக்கில் கொலையை போலீஸ் நிரூபிக்க வேண்டும். தனிச் சட்டம் கொண்டு வந்து சாதி வெறிதான் கொலைக்குக் காரணம் என்றால், குற்றம்சாட்டப்பட்டவரே தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காகத்தான் தனிச்சட்டம் வேண்டும் என்கிறோம். சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பளிக்க தனிக் காவல் பிரிவை உருவாக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அது அமலாகவில்லை.

கவுசல்யா வெளியிட்டுள்ள அறக்கட்டளைக்கான பிரகடனத்தில் சாதி மறுப்புத் திருமணத்தை ஊக்குவிக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். காதல் திருமணங்கள்தான் பெரும்பான்மையாக சாதி மறுப்புத் திருமணமாக நடைபெறும். இளைஞர்களே! இளம் பெண்களே! காதலியுங்கள்!  காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்! நாம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கக் கூடாது. என் குடும்பத்தில் நடந்ததை இங்கு கூற விரும்புகிறேன். எனக்கு சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை.
கடவுள் நம்பிக்கையும் இல்லை. பிறப்பால் நான் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவன். என்னுடைய மகன் ஒரு தலித் பெண்ணைக் காதலித்த போது நானும் என் மனைவியும் அவர்களை வாழ்த்தி  சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தோம்.

சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும்  இணைத்து நடத்தினால் வெற்றி பெற முடியும். கவுசல்யா தொடங்கியுள்ள அறக்கட்டளைக்கு அனைத்து வகையான உதவிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்திடும்.கவுசல்யா ஒரு சமூகப் போராளி.  அவர் தொடங்கியுள்ள அறக்கட்டளையின் நோக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: