சென்னை:                                                                                                                                                                                  ஐ.எஸ்.எல் கால்பந்து 4வது தொடரின் 2வது அரையிறுதி ஆட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு 8மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும் என்பதால் துவக்கம் முதல் கோவா அணி வீரர்கள் பந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். முதல் 15 நிமிடங்களில் சென்னை அணிக்கு தண்ணி காட்டினர்.பிறகு, உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்தால் சென்னை வீரர்கள் சுறுசுறுப்பாக விளையாடினர். 14வது நிமிடத்தில் கோவா வீரர் லான்ஸரோட்டின் கோல் முயற்சியை சென்னை கோல்கீப்பர் கரண்சித் சிங் அருமையாக தடுத்தார்.

இதன் பின்னர், சென்னை வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. 26வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜேஜே பந்தை தலையால் முட்டி அருமையான கோல் அடித்தார். அந்த ஆர்ப்பரிப்பு அடங்குவதற்குள் ஃப்ரிகிக் வாய்ப்பில் நெல்சன் தூக்கி உதைத்த பந்தை உள்ளூர் நாயகன் தனபால் கணேஷ் தலையால் முட்டி அட்டகாசமான கோல் அடித்து 19 ஆயிரம் ரசிகர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். முதல் பாதியில் பதிலுக்கு கோல் போட முயன்ற கோவா வீரர்களின் அனைத்து முயற்சிகளையும் சென்னை வீரர்கள் முறியடித்தனர்.2 வது பாதியில் கோவா அணியின் தாக்குதல் ஆட்டம் களைக் கட்டியது. அவர்களது நேர்த்தியான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. ஆனாலும், கோல் முயற்சிகள் அனைத்தும் கானல் நீராய் போனது.

90 வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜேஜே இரண்டாவது கோலை அடித்தார். அவர் கோல் அடித்ததும், உள்ளூர் ரசிகர்களின் ஆரவா ரத்தால் அரங்கமே அதிர்ந்தது. இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இறுதிப்போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் 17ஆம்தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: