கோவை :
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் தற்போது வரை வழங்கப்படாததால் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி நிரந்தர பணியாளர்களாக 3 ஆயிரத்து 667 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் நிர்வாகத்துறையில் 730 பேரும், துப்புரவு தொழிலாளர்கள், குடிநீர் விநியோகிப்பாளர்கள், வாகன ஓட்டுனர்கள் என 2 ஆயிரத்து 937 பேரும் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் ஒவ்வொரு மாதமும், முதல் தேதியிலேயே வங்கியில் செலுத்தப்படும். இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் 15 ஆம் தேதியாகியும் இதுவரை வங்கியில் செலுத்தப்படவில்லை. இதன்காரணமாக இத்தொழிலாளர்கள் தற்போது பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பழனியம்மாள் என்ற துப்புரவு தொழிலாளி கூறுகையில், பொழுது விடி
வதற்கு முன்பு ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு சென்று குப்பை அள்ளும் பணியை செய்கிறோம். மாத ஊதியத்தில் வாழ்க்கை நகர்த்துகிற எங்களுக்கு மாநகராட்சி வங்கியில் செலுத்தும் ஊதியம்தான் வாழ்வாதாரமே. இந்த மாதம் ஏதோ ஐடி கட்ட வேண்டும். அப்போதுதான் சம்பளம் கிடைக்கும் என்று அதிகாரிகள் சொல்லிட்டாங்க. படிப்பறிவு இல்லாத எங்களுக்கு எது சாமி தெரியும், நீங்களா எதையாவது செஞ்சு சம்பளத்த சீக்கரமா போடுங்கன்னு சொன்னோம்.ஆனால், இப்பவரைக்கும் சம்பளம் கைக்கு கிடைக்கல. இப்பத்தான் ஐடி வேலைய செய்யுற ஆடிட்டருக்கு 300 ரூபாய் பீஸ் தரனும்னு கேட்டாங்க. அதையும் கொடுத்திருக்கோம். இன்னும் பத்துநாள் ஆகும்னு சொல்றாங்க, என்ன செய்வதுன்னே தெரியல. இந்த மாசத்த சமாளிக்க நூத்துக்கு பதினைந்து ரூபாய் கந்து வட்டிக்கு கடன் வாங்கித்தான் சமாளிக்கனும் என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்கையில், மார்ச் மாதம் என்பதால் ஆடிட்டிங் இறுதிப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மாநகராட்சியில் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஐடி கட்ட வேண்டும் என்கிற உத்தரவு உள்ளது. நமது மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுஊழியர்கள் பெரும்பாலானவர்கள் ஐடி கட்டுவது என்பதே தெரியாது. ஆகவே அவர்களின் விபரங்களை பெற்று 2015 மற்றும் 16,17 ஆண்டிற்கான வருமானவரி குறித்து தாக்கல் செய்யும் பணி நடைபெறுகிறது. இதனால்தான் இந்த காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், தற்போது ஒவ்வொரு துறையாக ஊழியர்களின் ஊதியத்தை வங்கியில் செலுத்தி வந்து கொண்டிருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஊழியர்களுக்கான ஊதியம் விரைவில் வங்கியில் செலுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: