2016 மார்ச் 13. கௌசல்யாவும், அவரது கணவர் சங்கரும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். தலித் சமூகத்தைச் சார்ந்த சங்கர் பலத்த காயங்களால் மரணமடைந்தார். சாதி ஆணவக் கொலை புரிந்ததாக தன்னுடைய பெற்றோர்கள் மீது குற்றம் சுமத்தி தாக்குதலில் உயிர் பிழைத்த கௌசல்யா வழக்கைத் தொடர்ந்தார். ’இந்தியாவின் தடைசெய்யப்பட்ட காதல்: நீதிமன்றத்தின் முன் நிற்கின்ற சாதி ஆணவக் கொலை’ என்ற தலைப்பில் சாதனா சுப்பிரமணியன் என்பவர் சங்கர் மரணம் குறித்த ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார். இந்த ஆவணப்படம் கொலை நடந்ததில் இருந்து இந்த வழக்கின் வழியாக கௌசல்யாவைத் தொடர்வதாக இருப்பதோடு, அவரது பெற்றோர்களின் நிலைப்பாட்டையும் நம் முன்பாக எடுத்து வைக்கும் விதத்தில் இருக்கிறது. இந்த ஆவணப்படம் குறித்து சாதனா சுப்பிரமணியன் எழுதியுள்ள அவரது பார்வை.

நவீன இந்தியா என்பது 1980, 90களில் நான் வளர்ந்த  நாட்டிலிருந்து முற்றிலும் வேறாக இப்போது மாறியிருக்கிறது. இப்போது இந்தியாவில் பாரம்பரியம்  மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றிற்கு இடையே நடைபெறுகின்ற மோதல்கள், என்னுடைய வாழ்நாளில் பாதியை இங்கிலாந்தில் கழித்து விட்ட என்னை, ஈர்த்திருக்கின்றன. வெகுகாலமாகவே இதுகுறித்து ஆராயும் வகையில் திரைப்படம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , சிசிடிவி காட்சிகளாகப் பதிவாகி இருந்த சங்கர், கௌசல்யா மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை நான் பார்த்தேன். மிகுந்த பொறுப்புணர்வோடும், கூருணர்வோடும் கையாளப்படும் போது இந்தியாவில் ஆழ்ந்து வேரூன்றியிருக்கும் சாதி அமைப்பு, புதிய தலைமுறையின் கனவுகள் என்று இந்த இரண்டையும் பற்றி மிகவும் முக்கியமான செய்தியை வெளிப்படுத்துவதற்கான ஆற்றல் இந்த சாதி ஆணவக் கொலையில் இருப்பதாக என் உள்ளுணர்வு சொன்னது. .

இதைச் சரியான முறையில் செய்ய வேண்டும் என்றால், தன்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து இப்போது பிரிந்து வாழுகின்ற சங்கரின் விதவை மனைவியான கௌசல்யாவையும்,  அந்தக் கொலையைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கௌசல்யாவின் குடும்பத்தினரையும்  அணுக  வேண்டும் என்பதில் நான் உறுதியாக  இருந்தேன்.  இந்த மாதிரிச் சூழல்களில், பாதிக்கபப்ட்டவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் அல்லது தங்களுடைய குடும்பத்தினருடன் திரும்பப் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என்பதால், பாதிக்கப்பட்ட நபர்களின் நியாயத்தை கேட்பது பெரும்பாலும் சாத்தியமற்றதாகவே இருக்கும். அதேபோல,  அத்தகைய  தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் பொதுவாக திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் இதுகுறித்து பேச விரும்பமாட்டார்கள்.

அவர்களுடைய வாழ்க்கை குறித்து திரைப்படம் தயாரிப்பது என்ற எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இருதரப்பையும் சமாதானம் செய்வதற்கு எனக்கு எட்டு மாதங்கள் ஆனது. சங்கரின் கொலைக்கு எதிரான வழக்குவிசாரணையின் இருபுறத்திலும் பங்கு பெற்றிருந்த அந்தக் குடும்பத்தைத் தொடர்வதாக 12 மாதங்கள் படம் பிடிக்கப்பட்ட இந்த திரைப்படம் இருந்தது. அந்த வழக்கின் முடிவில் கௌசல்யாவின்  பெற்றோர்  மரணதண்டனையை எதிர்கொண்டிருக்கின்றனர். காலப்போக்கில், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்த முன்னோக்குகளை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். நவீனமயம் நோக்கி இந்தியா வேகமாகப் பயணிக்கின்ற அதே வேளையில், , மிகப்பெரிய, பரந்துபட்ட இந்த நாட்டில் உள்ள சில சமூகப் பிரிவுகளின் மீது சாதிகளுக்கு ஆதரவாக  பாரம்பரியமாக, காலகாலமாக நிலைத்து இருக்கின்ற மனப்பான்மை தன்னுடைய பிடியை இறுகப் பிடித்திருப்பதை உணர்ந்து கொண்டேன். இது பெண்களைப் பொறுத்தவரையில் மிகவும் பொருந்திப் போவதாக இருக்கிறது.

சாதிகளுக்கிடையே அல்லது மத நம்பிக்கைகளுக்கிடயே நடைபெறுகின்ற திருமணங்களினால் ஏற்படுகின்ற அவமரியாதைகளால் உண்டாகும் களங்கத்தின் விளைவாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இத்தகைய கொலைகள் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் யாரென்பது யாருக்கும் தெரியாமலேயே போய் விடுகிறது. ஆனாலும், கௌசல்யாவிடம் ஒரு துணிச்சலான இளம் பெண் இருப்பதை நான் கண்டேன். நீதிக்காகப் போராடுகின்ற கௌசல்யா, தன்னுடைய கணவரின் கொலை கவனிக்கப்படாமல் போய் விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதுடன், மரபார்ந்த மதிப்பீடுகள் தன் மீது ஏற்றி வைக்கும் தடைகளை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக இருக்கவில்லை. எனக்கு ஒரு விஷயம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு சில வழிகளில், கௌசல்யா குடும்பத்தினரும் சாதி அமைப்பினால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர். சாதி ஆணவக் கொலைகளின் கொடிய வன்முறைகளை ஏற்றுக் கொள்வதாக இல்லாமல், அவர்களுடைய குழந்தை சாதி மாறித் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களது சமூகத்தினரும், உறவினர்களும் அவர்கள் குடும்பத்தின் மீது ஏற்படுத்தும் அவமானத்தை அவர்கள் உணர்வதாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.

தனிக் குடும்பங்களில் ஏற்படுகின்ற இந்த அழுத்தங்களைப் புரிந்துகொண்டு அதை எதிர்கொள்ளாவிடில், இத்தகைய நடத்தையை ஒழிப்பதில் சிறிய அளவிலான முன்னேற்றம்கூட ஏற்படாது. சாதிய வன்முறையை  சமூக கலாச்சாரப் பிரச்சனையாகக் கருதாமல், வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே கருதுவது என்பது வரும் காலங்களில்  இந்தியாவிற்கு உதவாது  என்ற முடிவுக்கே நான் இறுதியாக வந்து சேர்ந்தேன். சாதி ஆணவக் கொலை மற்றும் சாதி பாகுபாட்டைச் சுற்றி எழுகின்ற பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்தத் திரைப்படம் உதவும் என்று நம்புகிறேன். இத்தகைய வெறுப்புணர்வுக் குற்றங்கள் மனிதர்கள் மீது ஏற்படுத்துகின்ற பேரழிவின் தாக்கத்தைக் காட்டுவதன் மூலம் இந்தப் பிரச்சினையை சரியாக விவாதிக்கவும், புரிந்து கொள்ளவும் முடியும் என்பதால், உரிய தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

 

சாதனா சுப்பிரமணியன், ஆவணப்பட தயாரிப்பாளர்

நன்றி:https://www.aljazeera.com/programmes/witness/2018/03/india-forbidden-love-honour-killing-trial-180306074425327.html

ஆவணப்படம் காண: https://www.youtube.com/watch?v=4aLys8M90Uk

— தமிழில்,, முனைவர் தா.சந்தரகுரு .. விருதுநகர்

 

Leave a Reply

You must be logged in to post a comment.