திருப்பூர்;

திருப்பூரில் இடுவாய் தியாகி கே.ரத்தினசாமியின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் கொட்டும் மழையிலும் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.

திருப்பூரில் கடந்த 2002 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி ஆதிக்க சக்திகளால் இடுவாய் ரத்தினசாமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுச்சியுடன் கடைப்பிடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று இடுவாய் கிராமத்தில் மலரஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இடுவாய் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகம் முன்பிருந்து நினைவு தின ஊர்வலம் மாலையில் தொடங்கியது. மழை பெய்து கொண்டிருந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் மார்க்சிஸ்ட் கட்சியினரும், இடுவாய் கிராம மக்களும் பெருந்திரளாக இதில் கலந்து கொண்டு அணிவகுத்து வந்தனர். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தியாகி கே.ரத்தினசாமியின் நினைவிடத்தில் ஊர்வலம் முடிவடைந்தது. அங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு எழுச்சி முழக்கத்துக்கு இடையே செங்கொடியை ஏற்றி வைத்தார்.

இதன் பிறகு தியாகி ரத்தினசாமிக்கு மார்க்சிஸ்ட கட்சியினர், கிராம மக்கள் உள்பட பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சியின் நிறைவாக இடுவாய் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, பேருந்து நிறுத்தத்தில் இருந்த கட்சிக் கொடி மரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் செங்கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் இடுவாய் கிளைச் செயலாளரும், தியாகி கே.ரத்தினசாமியின் இளைய சகோதரருமான கே.கருப்புசாமி தலைமை வகித்தார். கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.கணேசன் வரவேற்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், வாலிபர் சங்க தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.உமாசங்கர், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பா.லட்சுமி, கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.

இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சி அணியினர் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக இடுவாய் ஊராட்சி கிளைகள் சார்பில் செம்மலர் மாத இதழ் 20, மார்க்சிஸ்ட் தத்துவ மாத இதழ் 20 ஆகியவற்றுக்கான ஆண்டு சந்தா தொகையை மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வழங்கினர். இந்நிகழ்வில் தியாகி ரத்தினசாமியின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.வாலிபர் சங்கம் தூய்மை பணிமுன்னதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தியாகி கே.ரத்தினசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு இடுவாய் மயானத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இத்துடன் பல்வேறு பகுதிகளிலும் இடுவாய் தியாகி கே.ரத்தினசாமி உருவப்படத்துக்கு மலர் மாலை சூடி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: