திருப்பூர், மார்ச் 13 –
திருப்பூர் மாநகரில் 40 ஆண்டு காலமாக கிரயம் செய்து வாங்கியநிலத்தில் வீடு கட்டிக் குடியிருப்போரை, கோயில் நிலம் எனச் சொல்லி காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகரில் உள்ள கோயில் நிலங்களை அளவீடு செய்வதாக இந்து அறநிலையத் துறை தற்போதுபல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்புச் செய்து வருகிறது. இதில் கருவம்பாளையம் கே.வி.ஆர்.நகர் பகுதியில் வீடுகளைக் காலி செய்யுமாறு சுமார் 500 பேருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு பிழைப்பிற்காக வந்தவர்கள், சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து விலை கொடுத்து இடத்தை வாங்கி சட்டப்படி அரசுப் பதிவுத் துறையில் கிரயப் பத்திரம் பதிவு செய்து அங்கு வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் முறைப்படி கிரயம் செய்த ஆவணங்கள் உள்ளன. இதில் சிலர் பிற்பாடு தங்கள் சொந்தத் தேவைக்காக வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். அவர்களிடமும் முறையான கிரய ஆவணங்கள் உள்ளன. இந்த இடங்களில் சிலர் முறையாக வங்கிக் கடன் பெற்று வீடு கட்டியும் வாழ்ந்து வருகின்றனர். ஏற்கெனவே 1963, 1974 ஆம் ஆண்டுகளில் ரயத்துவரி பட்டா நிலங்களில் கோவை செட்டில்மெண்ட் தாசில்தார், கோபி செட்டில்மெண்ட் தாசில்தார் ஆகியோர் மூலம் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே பட்டா பெற்ற இடங்களில் நில விற்பனை, பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளன.

பல இடங்களில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்து அறநிலையத் துறை விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் கோயில் நிர்வாகங்கள் சார்பில் கோயில் நிலங்கள் மீட்பு என்ற பெயரில் பட்டா நிலங்களையும், கோயில் நிலங்கள் என அறிவித்து பத்திரப் பதிவு செய்வதையும், வீட்டுக் கடன் பெறுவதையும் நிறுத்தி வைத்துள்ளனர். இத்துடன் உடனடியாக வீட்டைக் காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். க.ச.எண் 189/2, 189/4, 189/5, 189/6, 189/8, 189/10 போன்றவைகளில் உள்ள இடங்களுக்கு பத்திரப் பதிவு தொடர வேண்டும் என ந.க. 10012/2013/ஜே1 நாள் 3.1.2014 அன்று திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம்மாவட்ட பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல பத்தாண்டுகளாக உழைத்துச் சேமித்த அனைத்துப் பணத்தையும் நிலத்தில் மீதும், கட்டிடத்தின் மீதும் செலவிட்டுள்ள மக்களிடம் இனி இந்த நிலத்திற்கு மதிப்பில்லை, உடனே காலி செய்யுங்கள் என நோட்டீஸ் அனுப்புவது அவர்களை மனரீதியாக கடுமையாக பாதிக்க வைத்துள்ளது. திருப்பூர் மாநகரின் பல பகுதிகளில் இதுபோன்ற பிரச்சனை உள்ள நிலங்கள் உள்ளன. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மேற்படி இடங்களில் வசித்து வரும் மக்களுக்கே வாழும் உரிமை, பட்டா கிரயம் செய்ய அனுமதி, வீட்டுக்கடன் அனுமதி ஆகியவை வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.