கோவை, மார்ச் 13-
வெள்ளலுர் குப்பை கிடங்கில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தீ விபத்துகளை கண்காணிக்க தவறியதாக மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், மறு சுழற்சிக்காக வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கொட்டப்படுகிறது. சுமார் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில் 250 ஏக்கர் அளவிற்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளதாக தொடர்ந்து அப்பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த குப்பைகளில் அடிக்கடி ஏற்படும் தீ வைப்பு சம்பவத்தால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயானது தொடர்ந்து மூன்று நாட்கள் எரிந்து கொண்டிருந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் எழுந்ததோடு, அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கினர். இதையடுத்து நகர பொறியாளர் நடராஜன் தலைமையிலான குழு ஒன்்றை அமைத்து, தீ விபத்து தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இந்த குழுவினர் தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து குப்பை கிடங்கை முறையாக கண்காணிக்க தவறியதாக, மேற்கு மண்டல உதவி பொறியாளர் மூர்த்தியை திங்கட்கிழமை முதல் பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொறுப்பாளர் ரவிக்கண்ணன், நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply