திருப்பூர், மார்ச் 13 –
வங்கதேசத்தில் இருந்து எவ்வித வரையறையும் இல்லாமல் ஆயத்தஆடை இங்கு இறக்குமதி செய்யப்படுவதால் பின்னலாடை சிறு, குறு தொழில் துறையினர் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சிஸ்மா பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து இங்கு ஆயத்த ஆடை இறக்குமதி அதிகரித்து வருகிறது. இதனால் பின்னலாடை, ஜவுளி வர்த்தகம், உள்நாட்டு சந்தையில் குறைந்து வருகிறது. ஆயத்த
ஆடை தயாரிப்பில் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் தொழில்துறையினர் முனைப்புகாட்டி வருகின்றனர். ஆனால், வர்த்தக சரிவால் பல பின்னலாடை நிறுவனங்கள் சரிசெய்ய இயலாமல் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வருகைக்குப் பிறகு தற்கொலைகள் அதிகரித்து வருவதை அரசு கணக்கிட வேண்டும். இந்தியா, வங்கதேசத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி வங்கதேசம் அனைத்து ஆயத்த ஆடை ஜவுளி பல ரகங்களையும் வரியில்லாமல் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த ஒரு சில ஆண்டுகளில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வரையறை இல்லாமல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இதனால் நேரடியாக வங்கதேசம் பலனடைந்தாலும், மறைமுகமாக சீன வர்த்தகம் பலனடைந்து வருகிறது.வங்கதேசத்தில் தயாரிக்கும் ஆயத்த ஆடைகளுக்கு தேவை
யான நூல் மற்றும் துணி வகைகளை சீனாவிலிருந்து வங்கதேசம் இறக்குமதி செய்து கொள்கிறது. இதனால் சீனா மறைமுகமாக இந்திய ஜவுளி சந்தையை கைப்பற்றி வருவதைக் காட்டுகிறது. வங்கதேசத்தின் ஆயத்த ஆடை வரவால் நம் நாட்டின் முக்கிய வர்த்தக சந்தை சரிவடைந்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் தொழில் துறையினர் பண வரவு செலவு பண சுழற்சி மந்தமடைந்து வருவதால் சிறு வர்த்தகர்களும், பெரும் வர்த்தகர்களும் தற்கொலை செய்து கொண்டு மரணிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதை ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

திருப்பூர் பின்னலாடை மாவட்டம் போன்ற தொழில் மாவட்டங்களில் தொழில் சரிவை சரி செய்து அரசால் தொழில் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை அறிந்து இக்குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பின்னலாடை துறையில் வெளிமாநில ஆர்டர்கள் குறைவதற்கு சில்லரை வணிக வர்த்தகம் மந்தமடைவதே காரணம். மூலப்பொருள் தொடங்கி தயாரிப்பு முடியும் வரை ஜி.எஸ்.டிக்குள் வரி செலுத்தும் பின்னலாடைகளுக்கு சில்லரை வர்த்தகத்தில் ஷோரூம் மற்றும் சிறு கடைகளில் வைத்து விற்பனை செய்யும் பின்னலாடை ரகங்கள் ரூ.200 முதல் ரூ.500 வரை உள்ள பின்னலாடையை வாங்கும் பயனாளிகளுக்கு எந்தவித வரியும் இல்லாமல், விலக்கு அளித்தால் சில்லரை வர்த்தகம் சற்று உயரும். வர்த்தக சுழற்சி முறையை கணக்கிட்டு வளர்ச்சிப் பாதைக்கு வழிவகை செய்ய, வரும் ஜி.எஸ்.டி. குழு கூட்டம் நடைபெறும் பொழுது ரூ.200 முதல் ரூ.500 வரை உள்ள பின்னலாடைகளுக்கு வரிவிலக்கு அளித்து வர்த்தகரீதியான வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

அத்தோடு இந்தியா முழுவதும் வங்கதேசம் ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடைகளுக்கு வரையறுப்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பின்னலாடை துறை சார்பாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை சார்பாகவும், தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) சார்பாகவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.