திருச்செங்கோடு:
திரிபுராவில் லெனின் சிலை தகர்த்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தி வரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தி வருகின்றனர். மேலும், புரட்சியாளர் லெனின் சிலைகளை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். இதேபோல், உத்தரபிரதேசத்தில் டாக்டர்அம்பேத்கர் சிலை உடைப்பு, தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை இடிப்பு போன்ற அராஜங்களை அரங்கேற்றி வருகின்றனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் இந்த வெறியாட்டத்தை கண்டித்தும், இத்தகைய வன்முறை சம்பவங்களை தொடர்ந்து தூண்டி வரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியன் ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம், நகர செயலர் ஐ.
ராயப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஆதிநாராயணன், சு.சுரேஷ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.சேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

கோவை:
கோவை வெள்ளளூர் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆர்.பாலகுரு தலைமை தாங்கினார். மதுக்கரை ஒன்றிய செயலாளர் பி.ரவிச்சந்திரன், விவசாய சங்க மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், சிவானந்தம் மற்றும் திராவிடர் கழக தலைமைக் கழக பேச்சாளர் வீரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.