கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான்,தனது கணவர் ஷமி பல பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு வைத்துள்ளதாகவும்,சூதாட்டத்திற்காக துபாய் ஹோட்டலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணிடம் பணம் வாங்கியதற்காக ஆதாரம் என்னிடம் இருக்கிறது என அடுத்தடுத்த புகார்கள் மூலம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். போதாக்குறையாக ஷமி பல பெண்களுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் அந்தரங்க விஷயங்கள் பற்றிய சாட் விவரங்களை கசியவிட்டு,குடும்பத்தினர்களுடன் இணைந்து ஷமி தன்னை கொலை செய்ய முயன்றதாக காவல்துறையிடம் புகாரும் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தனது மனைவியின் புகாரால் துவண்டு போயிருக்கும் முகமது ஷமிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் தோனி ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

தோனி கூறுகையில், “இது ஷமியின் குடும்ப விஷயம்.எனக்கு தெரிந்தவரை முகமது ஷமி மிகவும் பண்பானவர்.அவர் மனைவி மற்றும் நாட்டை ஏமாற்றி இருக்க மாட்டார் என உறுதியாக நம்புகிறேன்.அவரது குடும்ப விஷயத்தில் இதற்கு மேல் நான் எதுவும் கூறக்கூடாது” என்றார்.

முகமது ஷமி நான் மனைவியுடன் சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறினாலும்,அவரது மனைவி எனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி நீதிக்காக தொடர்ந்து போராடுவேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையேயான மோதல் முற்றும் எனத் தெரிகிறது.

Leave A Reply