சென்னை:
மதுரை மாவட்டம் சிக்கந்தர்சாவடி செல்லைய்யா நகர், கூடல்புதூர் ஆகிய இடங்களில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மீது ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஞாயிறன்று பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது அடுத்தடுத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.

வழிபாட்டுத்தலத்தில் இருந்த பைபிள் நூல்களை கிழித்து எறிந்தும் தீவைத்துக் கொளுத்தியும் அராஜகம் செய்துள்ளனர். மைக் உள்ளிட்ட சாதனங்களை உடைத்துள்ளனர். பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள், போதகர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பெண்களை ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். இனியும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தினால் உயிரோடு எரித்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளதோடு மதுரையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாகவும், அடுத்தடுத்து தாக்குதல் நடக்கும் என்றும் பகிரங்கமாகவே மிரட்டியுள்ளனர். இந்த தாக்குதல்களை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்த தங்கம் வெங்கடேஷ், கோபி, கரிமேடு அழகர்சாமி ஆகியோர் தலைமையில் வன்முறைக் கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. அழகர்சாமிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருடன் வந்த துப்பாக்கி ஏந்திய காவலர் தாக்குதலை வேடிக்கை பார்த்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் அவரிடம் முறையிட்டபோது வன்முறையாளர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு அவர் கூறியுள்ளார். வன்முறையாளர்களுக்கு துணை நின்ற அந்த காவலர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அழகர்சாமிக்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பையும் விலக்க வேண்டும். மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் மதுரை மாநகர், புறநகர் காவல்துறையினரின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த தாக்குதல்கள் தொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூடல்புதூர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதியக்கூட மறுத்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையிலும் தாக்குதல் நடத்திய வெறியர்கள் அனைவர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில உதவித் தலைவர் டி.லட்சுமணன், மாநில பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து ஆகியோர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு:

மதுரை அலங்காநல்லூர் சாலையில் உள்ள சிக்கந்தர் சாவடி சதங்கை கலைமையம் அருகிலும், கூடல் புதூர் பகுதிலும் செயல்பட்டு வருகிற நான்கு கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில், ஞாயிறன்று சமூக விரோதக் கும்பல் நுழைந்து கட்டிடங்களை சேதப்படுத்தியும், பைபிள் மற்றும் துண்டு பிரசுரங்களை தீயிட்டு கொளுத்தியும் உள்ளனர். தடுத்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அங்கு இருந்த பெர்ஷியாள் என்ற பெண்ணை நிர்வாணப்படுத்தி படம் எடுத்து, சமூக ஊடகங்களில் போடுவதாக அச்சுறுத்தி, இழிவுபடுத்தியுள்ளனர்.

இப்பகுதியில் வழிபடக் கூடாது என்றும் மீறி வழிபட தேவாலயங்களுக்கு வந்தால், தீயிட்டு கொளுத்தி விடுவதாகவும், மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டியுள்ளனர். தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிபாட்டு இடங்களுக்கு பாதுகாப்பு அளித்து, அமைதியான முறையில் வழிபாடுகள் நடப்பதற்கு உறுதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கேட்டுக்கொள்கிறது.
அரசியல் சட்டத்தில் மக்களின் வழிபாட்டு உரிமை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.நடந்த சம்பவம் அரசியல் சாசனத்திற்கு வெளிப்படையாக விடப்படும் சவாலாகும். இதனை அனைத்து அரசியல் கட்சியினரும், ஜனநாயக அமைப்புகளும் இச்செயலை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

தமிழக அரசும் காவல்துறையும் காட்டுகிற மென்மையான அணுகு முறையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மத வெறி வன்முறைகளைப் பரப்பி, கலவரங்களை உருவாக்கி, சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கிற இதுபோன்ற சம்பவங்களைத் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும்.

காலங்காலமாக மனித நேயத்துடன் வாழ்ந்து வருகிற தமிழக மக்கள் இத்தகைய அநீதிகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்றும், மத நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் காப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.