புதுதில்லி, மார்ச் 13-

நாசிக்கிலிருந்து மும்பை வரை ‘விவசாயிகள் நீண்ட பயணம்’ நடத்தி வரலாறு படைத்துள்ள மகாராஷ்ட்ரா விவசாயிகளுக்கு சிஐடியு தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொள்கிறது என்று இந்தியத் தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் தபன்சென் கூறியுள்ளார்.

தபன்சென் மேலும் கூறியிருப்பதாவது:

 அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்ட்ர மாநிலத் தலைமையின்கீழ் கால்நடையாகவே சுமார்  50 ஆயிரம் விவசாயிகள், சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ள பயணத்தை காலில் செருப்புகூட பலருக்கு இல்லாத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, தங்கள் கோரிக்கைகளான கடன் தள்ளுபடி, வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி பழங்குடியினருக்கு வன நிலங்களைச் சொந்தமாக்குதல், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் முதலானவற்றை  வலியுறுத்தி,  வீரத்துடன் பயணத்திருக்கிறார்கள்.

நாட்டில் பல பகுதிகளிலும் விவசாயிகளின் கூட்டு இயக்கங்களுக்காக முன்கை எடுத்து விவசாயிகளின் போராட்டங்களை முன்னெடுத்துச்சென்றுகொண்டுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்கு, சிஐடியு,  தன் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் முன்பு நடைபெற்றதைப்போலவே, இப்போது மகாராஷ்ட்ராவிலும், விரக்தி மற்றும் தற்கொலை எண்ணம் மேலோங்கியுள்ள போதிலும் விவசாயிகளைப் போராட்டப்பாதையில் திருப்பி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பிரச்சாரங்களும், போராட்டங்களும் அமைந்துள்ளன. இத்தகைய  வர்க்கப் போராட்டங்கள் நாட்டின் இதர மாநிலங்களுக்கும் வரவிருக்கும் நாட்களில் பரவும், மத்திய பாஜக அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களின் போராட்டத்தை உக்கிரப்படுத்திடும் என சிஐடியு நம்பிக்கைகொள்கிறது.

மகாராஷ்ட்ரா விவசாயிகளின்  போராட்ட வெற்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும், குறிப்பாக நாடு முழுதும் உள்ள தொழிலாளர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் போராடிய விவசாயிகளுடன் தொழிலாளி வர்க்கம் ஒருமைப்பாட்டுடன் நின்றிருக்கிறது. நாடு முழுதும் போராடிவரும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு சிஐடியு எப்போதும்போல் ஆதரவு அளிப்பது தொடரும் என்றும் சிஐடியு உறுதி அளிக்கிறது. இவ்வாறு தபன்சென் கூறியுள்ளார்.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: