====வி.மாரிமுத்து, நாகை=====
உலக மக்கள் தொகையில் 150 கோடிக்கு மேற்பட்ட மக்கள் மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.உலகில் நடைபெற்ற பல புரட்சிகளுக்கு விதையாக இருந்தவர் காரல்மார்க்ஸ். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த காலம், ஐரோப்பியாவில் தொழிற்புரட்சி உச்சத்தில் இருந்தது. பசுமைப் புரட்சியின் போது, விவசாயிகளை நிலப்பிரபுக்கள் எப்படி அடிமைகள் போன்று நடத்தினார்களோ,அப்படியே தொழிற்புரட்சியின் போதும் முதலாளிகள் தொழிலாளர்களுக்குக் குறைந்த கூலி கொடுத்துக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி வந்தனர்.

அது ஏட்டுச் சுரைக்காய் அல்ல…
மார்க்ஸ் சட்டம் படித்தார். தத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றார். தொழிலாளர்களுக்குச் சாதகமான ஒரு நிலை, காலப்போக்கில் ஏற்படும் என்ற சோசலிஸ்டுகளின் நிலைப்பாட்டை மார்க்ஸ் நிராகரித்தார்.

திடீரென ஒருநாள், தொழிலாளர் வர்க்கம் பொங்கி எழும்; அதன்மூலம் புரட்சி வெடிக்கும். இறுதியில் தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சி மலரும் என்று மார்க்ஸ் உறுதியாகக் கூறினார்.
மார்க்சின் இந்தக் கூற்று குறித்து, ‘இது ஏட்டுச் சுரக்காய், கறிக்கு உதவாது’ என்று கூப்பாடு போட்டார்கள். ஆனால், 1917இல், ரஷ்யாவில் அக்டோபர் (நவம்பர்) புரட்சி நடைபெற்று, கம்யூனிஸ்ட்கள் கைகளுக்கு அரசு அதிகாரம் வந்த பொழுதுதான் மார்க்சின் வார்த்தைகளில் எத்தனை உண்மைகள் பொதிந்திருந்தன என்பதை உலகம் ஒப்புக் கொண்டது. மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ (தாஸ் கேபிட்டல்) என்னும் நூல்தான் கம்யூனிஸ்ட்டுகளின் வேத நூல்.
19-ஆம் நூற்றாண்டின் மகத்தான சிந்தனையாளராகப் போற்றப்படுகிற மார்க்ஸ், தன் வாழ்வில் வறுமையைத் தவிர, வேறு எதையுமே பார்க்கவில்லை. இது பற்றி, மார்க்சின் துணைவி ஜென்னி இப்படி எழுதினார்-“அலைக்கழிக்கப்பட்ட நான் அன்று வீடு திரும்பினேன். எங்கள் குட்டி தேவதை ‘டிரான்சிஸ்கா’ மார்புச் சளியால் மூச்சுவிடத் திணறிக்கொண்டு இருந்தாள். வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே, மூன்று நாட்கள் போராடிக் கடைசியில் அவள் தோற்றுப் போனாள். தாய்ப் பாலோடு என் நெஞ்சின் வேதனையையும் வருத்தத்தையும் சேர்த்துப் பருகியதால்தான் அவள் இறந்துபோனாள் என்று நினைக்கிறேன்.…

அவள் பிறந்தபோது, தொட்டில் வாங்கக் கூட எங்களிடம் பணம் இல்லை. இறந்த போது, சவப்பெட்டி வாங்கக் கூட காசில்லை…” என்று மனதை ரணப்படுத்தும் ஜென்னியின் இந்த வார்த்தைகள் அத்தனையும் உண்மையானவை.

விட்டுச் சென்ற ஜென்னி தேடிச் சென்ற மார்க்ஸ்
முதலாளித்துவ ஆதிக்கத்தை எதிர்த்தே எழுதிக் கொண்டிருந்ததால், மார்க்ஸ் எப்பொழுதும் எவருக்குக் கீழும் பணிபுரியத் தயாராக இல்லாமல் இருந்தார்.தனது குழந்தைகள் வறுமையில் அடுத்தடுத்து மரணமடைவதைச் சகிக்க முடியாமல், மார்க்ஸ், இரயில்வே நிறுவனம் ஒன்றில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்தார். வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே அவருடைய கையெழுத்து சரியில்லை என்று வீட்டுக்கு அனுப்பி விட்டது இரயில்வே நிர்வாகம். அந்த அளவிற்கு மோசமான கையெழுத்து மார்க்சினுடையது. பல சமயங்களில் தனது கணவரின் கையெழுத்தை ஜென்னிதான் படித்துத் திரும்ப அவருக்குச் சொல்வார்.1881இல் ஜென்னி மரணமடைந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து 1883 மார்ச்-14 அன்று மார்க்ஸ் மரணமடைந்தார்.

‘உலகப் பொருளாதாரத்தின் பைபிள்’ என்று சொல்லக் கூடிய ‘தாஸ் கேபிட்டல்’ (மூலதனம்), என்னும் நூலை உலகுக்கு வழங்கிய மகத்தான மனிதர் மார்க்ஸ்.

மனித வரலாற்றின் வளர்ச்சி விதி
மார்க்ஸ் பற்றிக் குறிப்பிடும்போது, அவருடைய உற்ற தோழர் ஏங்கல்ஸ் குறித்துக்
குறிப்பிடாமல் இருக்க முடியாது. இவர்கள் இருவரையும் நட்புக்கு எடுத்துக்காட்டகச் சரித்திரம் குறிப்பிடும். மார்க்ஸ் இறந்தபோது, ஏங்கல்ஸ் ஆற்றிய உரையே அதற்கு சாட்சி-
“இதோ, இந்த மார்ச் 14-ஆம் தேதி, மதியம் 3 மணிக்கு,இவன் சிந்தனையில் மூழ்கிக் கொண்டு இருந்தான். அவனை நாங்கள் இரண்டு நிமிடம் தனிமையில் விட்டுவிட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் இனி விழிப்பே இல்லாமல் அவன் நாற்காலியில் உறங்கிப்போயிருந்தான். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பாட்டாளி மக்கள் புரட்சி வரலாற்றில் இம்மனிதனின் மதிப்பு மதிப்பிட முடியாதது.டார்வின் எவ்வாறு பரிணாம வளர்ச்சியைக் கண்டறிந்தாரோ, அதுபோல், மார்க்சும் மனித வரலாற்றின் வளர்ச்சி விதியைக் கண்டடைந்தான். அரசியல், மதம், அறிவியல், கலை இவற்றை அடையும் முன், உண்ண உணவு, உடுத்த உடை, குடிக்க நீர், இருக்க இடம் ஆகியவற்றை மானுடம் பெறவேண்டும் என்று இவன் உலகுக்குச் சொன்னது எளிய உண்மைதான்.

ஆனால், அதோடு முதலாளித்துவ அடிப்படையிலான உற்பத்தி முறையையும் அது யாருக்குப் பணிந்து செல்கிறது என்ற உண்மையையும் வெளிச்சம்போட்டுக் காட்டினான்.
தன்னைப் புரட்சிக்காரன் என்று அடையாளம் காட்டிக் கொள்வதில்தான் இவனுக்கு விருப்பம்.
முதலாளித்துவ சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் அமரவைக்க அரும்பாடுபட்டான். போராட்டம் என்னும் ஆயுதம் கொண்டு தன் இறுதி மூச்சு உள்ளவரை உழைத்தவன்….

எத்தனைபேர் வேண்டுமானாலும் இவன்மீது குற்றம் சுமத்தலாம், பழி போடலாம். ஆனால், அவன் பாட்டாளிகளை நேசித்தான். உழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்தான். மார்க்ஸ் பிறந்தபோது, யூதனாகப் பிறந்தான். புரட்சிகாரனாக வளர்ந்தான். ஒரு போராளியாக இவனது பெயர் நிலைத்து இருக்கும்; அவன் எழுத்துக்களும் அப்படித்தான்,…”இவ்வாறு, தனது நண்பனுக்காக ஏங்கல்ஸ் ஓர் உணர்ச்சிப் பூர்வமான உரையாற்றினார்.
உலகப் பொருளாதாரத்தின் சூத்திரம் சொல்லும் புகழ்பெற்ற ‘தாஸ்கேபிட்டல்’ நூல், இன்று உலகம் முழுவதும் பலப் பதிப்புகள் இன்னும் வந்துகொண்டே இருக்கின்றது. இந்த நூலைத் தன் உயிரினும் மேலான நண்பன் ஏங்கல்சுக்கு அர்ப்பணித்தார் மார்க்ஸ்.மரணத்தைத் தழுவும் தருவாயில் இருந்த மார்க்சிடம், “உலகிற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என ஒருவர் கேட்டார்.

“தான் வாழும்போது உலகிற்கு எந்தச் செய்தியையும் சொல்லாத முட்டாள் தான் இறக்கும்பொழுது ஏதாவது சொல்லவேண்டும்” என்று மார்க்ஸ் கூறி முடித்தார்.
அவர் வாழும்போது சொன்ன தத்துவத்தை உலகம் இன்று உச்சி மோந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது, அவர் காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கட்டுரையாளர்: சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்

Leave a Reply

You must be logged in to post a comment.