புதுதில்லி:
இந்தியாவைச் சேர்ந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளார்.இந்தியா – பாகிஸ்தான் என்றாலே இரண்டும் பகைநாடுகள் என்ற பார்வைதான் இருக்கிறது. இந்த பகை உணர்வைத் தூண்டி விட்டதில் அமெரிக்காவுக்கும், இந்தியா, பாகிஸ்தானிலுள்ள மத அடிப்படைவாதிகளுக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் பரிவாரங்களும் மக்களைத் துண்டாடி அரசியல் லாபம் அடைவதற்கு இப்போது இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

எனினும், அவ்வப்போது சில நிகழ்ச்சிகள், இருநாடுகளின் பகைமை அரசியலை பின்னுக்குத் தள்ளுவதும் உண்டு. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவது, அங்குள்ள மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்றவைதான் அன்பை விதைப்பதாக இருந்து வருகின்றன.அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளான டவ் சுகாதார பல்கலைக்கழக மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள பலருக்கு இந்தியாவின் புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான சுபாஷ் குப்தா, அறுவைச் சிகிச்சை மேற்கொள்கிறார். மேலும், அந்த மருத்துவமனை மருத்துவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை குறித்து பயிற்சியும் அளிக்க உள்ளார்.

இந்தத் தகவல்களை டவ் சுகாதார பல்கலைக்கழகத் துணைவேந்தர் சையத் குரேஷி தெரிவித்துள்ளார். “சுபாஷ் குப்தாவின் பயிற்சியின் மூலம் பாகிஸ்தான் மருத்துவர்கள் எதிர்காலத்தில் தாங்களாகவே இவ்வகை அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். ஏற்கெனவே பாகிஸ்தானில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளிலும், பொது மருத்துவமனைகளிலும் இந்திய மருத்துவர்கள் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு இந்தச் சமயத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று சையத் குரேஷி கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.