இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த மகாராஷ்டிர விவசாயிகளின் பிரம்மாண்ட நடைப்பயண பேரணி முடிவுக்கு வந்த நிலையில், 180 கிலோ மீட்டர்கள் நடந்து வீக்கமடைந்த, கொப்பளம் உண்டான விவசாயிகளின் கால்களை காட்டுகிறது இந்த புகைப்படத் தொகுப்பு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாயன்று மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்திலிருந்து அம்மாநில சட்டசபையை முற்றுகையிடுவதற்காக மும்பையை நோக்கி பயணிக்க தொடங்கிய விவசாயிகள் நேற்று காலை மும்பை வந்தடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மாநில அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டுமென்றும், எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி இந்த பேரணியை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக இந்த பேரணியில் பங்கேற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியின விவசாயிகள் ஆவர். காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யும் இவர்களின் நிலவுரிமை வனத்துறையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எனவே, நிலவுரிமை, கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை வலியுறுத்தி இப்பேரணியில் பங்கேற்றுள்ளனர் விவசாயிகள்.

விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை மகாராஷ்டிர மாநில அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

”விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். இது குறித்து அவர்களுக்கு எழுத்து பூர்வமாக ஒரு கடிதத்தையும் அளித்துள்ளோம்” என்று மகாராஷ்டிர மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் பிபிசியிடம் கூறினார்.

வன பகுதி நிலங்களை விவசாயிகளுக்கு மாற்றும் உரிமை தொடர்பான பிரச்சனை ஆறு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என்று தெரிவித்த மாநில அரசு, விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் கடன்களை ரத்து செய்வது தொடர்பான பிரச்சனை பற்றி பேச ‘அகில் பாரதிய கிசான் சபா’ அமைப்பின் இரு பிரதிநிதிகளையும் உள்ளடக்கி ஒரு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/india-43382685

நன்றி: பிபிசி தமிழ்

Leave a Reply

You must be logged in to post a comment.