பொள்ளாச்சி, மார்ச் 13-
பொள்ளாச்சி அருகே பொதுமக்களுக்கு விநியோகிகப்படும் குடிநீரை திருடி கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு தாலுகாவிற்குட்பட்ட 11 கிராமங்களுக்கு, அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்பாளையம், தாமரைக்குளம் மற்றும் நல்லட்டிபாளையம், மாசநாயக்கன்பாளையம், செட்டியக்காபாளையம் கிராமங்களில் சிலர் சட்டவிரோதமாக குடிநீரை திருடி வருகின்றனர். குறிப்பாக, சில தனியார் கட்டட ஒப்பந்ததாரர்கள் அரசு அதிகாரிகளின் துணையோடு தண்ணீர் திருடி கட்டட பணிக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மேற்குறிப்பிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் போதிய குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து செட்டியக்காபாளையம் கிராம செயல் அலுவலரிடம் முறையிட்டபோது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததுடன், புகார் தெரிவிப்பவர்களிடம் அலட்சியமாகவும், அதிகார தோரணையுடன் பேசி திருப்பி அனுப்புவதாகவும் குற்றம்சாட்டி திங்களன்று ஆதித்தமிழர் பேரவை மாவட்ட நிதி செயலாளர் பெ.ப.வானுகன், கோபால் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இம்மனுவைப் பெற்றுக்கொண்ட சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர், இதுபற்றி சார் ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.