கோவை, மார்ச் 13-
தமிழகம் முழுவதும் தண்டனை காலம் முடிந்து சிறையில் உள்ளவர்களுக்கு தமிழக அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதியான ரிஸ்வான் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறையில் உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் அவர் உயிரிழந்ததாக கூறி, அவரின் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து கடந்த இருதினங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரிஸ்வானின் சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா செவ்வாயன்று சந்தித்தார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரிஸ்வான் உயிரிழந்ததற்கு மனவேதனை தான் முக்கியக் காரணம். சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறப்பான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வாரந்தோறும் ஒருமுறை மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

இதேபோல், தமிழகம் முழுவதும் தண்டனைக் காலம் முடிந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கோவை சிறையில் மட்டும் 300 பேர் உள்ளனர். இவர்களில் 44 பேர் இஸ்லாமியர்கள். இவர்கள் அனைவரும் எந்தவிதமான சாதி, மதம் மற்றும் எந்த வழக்கு என்பது போன்ற பாகுபாடுகள் இன்றி மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply