புதுதில்லி:
குடியரசுத் தலைவரும், பிரதமரும் பயணிப்பதற்கு தனித்தனி விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரின் வெளிநாடு, உள்நாட்டு பயணத்துக்காக இரண்டு ‘போயிங் 77-300 இஆர்’ விமானங்களை அண்மையில் ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியது. இந்த விமானத்தில் விஐபி-க்கள் ஓய்வு அறை, பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் அறை, மருத்துவச் சிகிச்சை அளிக்கும் அறை போன்றவை இடம் பெற்றிருந்தன. வைபை வசதி மற்றும் எந்த விதமான ஆயுதங்களாலும் தாக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

குடியரசுத் தலைவரும் பிரதமரும் இதற்கு முன்பயன்படுத்திய போயிங் 747 விமானம் போல் இல்லாமல், 777 போயிங் விமானம் மிகவும் நவீனமானது. இந்த விமானம் எந்தவிதமான இடையூறுமின்றி தில்லியில் இருந்து அமெரிக்காவுக்கு இடைநிற்காமல் பறக்க முடியும். அதற்கேற்றாற்போல் எரிபொருள் நிரப்பும் வசதியும் இதில் உண்டு.

இந்நிலையில், இந்த வகையான விமானங்களை விரைவில் மத்திய அரசே சொந்தமாக வாங்கி, விவிஐபிக்களின் பயன்பாட்டுக்காக மட்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த நிதி ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 469 கோடி ஒதுக்கவிருக்கும் மத்திய அரசு, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திடம் இருந்தே விமானங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது.குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் மட்டுமே செல்லும் இந்த விமானங்களை இயக்குவதற்கு சிறப்புப் பயிற்சி பெற்ற 44 பைலட்கள் தயார் செய்யப்படுகின்றனர். அதில் 4 பேர் எப்போதுமே மாற்று பைலட்களாக செயல்பட உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: